நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசியலுக்கு வர அவர் ஆயுத்தமாகி இருந்தநிலையில், உடல்நிலை காரணமாக அந்த முடிவை ரஜினிகாந்த் கைவிட்டார். பின்னர் உடல்நிலை தேறி வந்ததை தொடர்ந்து, சினிமா படங்களில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த மாதம் திரைக்குவர இருக்கிறது. கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்/
ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த தகவல் பரவியபடி இருந்தது. இந்த தகவல் உண்மையா? வதந்தியா? உறுதிபடுத்த முடியாத தகவல்களால் ரசிகர்கள் தவித்தப்படி இருந்தனர். அப்போலோ ஆஸ்பத்திரி முன்பும் ரசிகர்கள் பலர் திரண்டு வந்தனர்.
இதற்கிடையே, செரிமான பிரச்சினை காரணமாக ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை என கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
இதற்கு இடையே இன்று பகலில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் அனுமதிக்கபட்டு இருப்பதாகவும்,. 24 மணி நேரத்திற்கு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.