`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும் மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை எழும்பூர் தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
*‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு பாஜக அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது ஆகும் எனவே நடைமுறை சாத்தியமற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
*இந்திய அரசு, இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயகே அரசுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் , கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் .
.*2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும்.
*ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.ரவி. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர், உடனடியாக அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
