சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம் நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ஆகியோர் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கனிமொழி பேசுகையில் கூறியதாவது:-
வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் மாமன்னர் பூலிதேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரர் ஒண்டிவீரன். ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார். ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால் ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார். இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.
இந்த மணிமண்டப வளாகத்தில் ரூ.51.78 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 8.9.2022 அன்று திறந்து வைத்தார்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் அருந்ததியினர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. சில நபர்களால் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தற்போது மீண்டும் இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு கனிமொழி பேசினார்
மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.