காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா; 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை அந்தோனி அ.குரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம் கடந்த 18.7.2023-ல் பேராலயமாக (பசிலிக்காவாக) உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இந்த பேராலயத்தின் முதல் விண்ணேற்பு பெருவிழா வருகிற .6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் பெருவிழா கொடியேற்றுகிறார். தொடர்ந்து 10-ம் தேதி மரியாளின் இறைஅனுபவம் என்ற தலைப்பில் மரியன்னை மாநாடு நடக்கிறது. 11-ம் தேதி புதுநன்மை விழா நடக்கிறது. 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை எம்.சார்லஸ், பேட்டை பங்குத்தந்தை எம்.மரிய அந்தோனிராஜ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
. 15-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடித் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது. அப்போது தேரின் பின்னால் கும்பிடு சேவை செய்து, கிறிஸ்தவர்கள் நேர்ச்சை செலுத்துவார்கள். 15-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும், பிற்பகல் 2 மணிக்கு மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு இந்தியிலும் திருப்பலிகள் நடக்கின்றன. மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி சேசு சபை அருட்தந்தையர்கள் சார்பில் நடக்கிறது. 18-ம் தேதி திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி பங்குத்தந்தை அந்தோனிராஜ் உடனிருந்தார்.
பெருவிழாவையொட்டி அரசுத்துறைகள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. கொடியேற்றம் மற்றும் பெருவிழாவையொட்டி கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.