• April 30, 2024

பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது;  கனிமொழி  பேச்சு

 பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது;  கனிமொழி  பேச்சு

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று (17/4/2024) ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை அருகில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:-  19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மறக்காமல் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓட்டு போடாமல் இருந்தால் அவர்களையும் வாக்களிக்க வைக்க  வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் மோசமான மழை வெள்ளத்தால் ஏரல் பகுதி  பாதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல் என்றதும் சுற்றிச் சுற்றி வருகிறார்.  இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை.

மழை வெள்ள நிவாரணம் 6 ஆயிரம், சேதமடைந்த வீட்டிற்கு 4 லட்சம் ரூபாய் நம்முடைய முதலமைச்சர் தான் வழங்கியுள்ளார். இங்கிருந்து வரியாக வாங்கி சென்று நமக்கு எதுவும் வழங்குவதில்லை.  இங்கிருந்து ஒரு ரூபாய் வாங்கிச் சென்றால் நமக்கு 29 பைசா மட்டுமே வழங்குகிறார்கள். பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு மூன்று ரூபாய் முதல் 7 ரூபாய் வரை வழங்குகிறார்கள். இந்த தேர்தலில் அவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். 

இனிமேல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பாஜக வேண்டாம் என்ற நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய கட்சி. நமது நாடு அமைதியான நாடாகத் தான் இருக்க வேண்டும் நமது மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருப்போம். நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் சுயமரியாதையோடு வாழ வைக்க முடியும். 

இதன் அடிப்படையில் நாடு அமைதியாக இருக்க வேண்டும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்குத் தொடர்ந்து கலவரங்கள் வெடித்துக் கொண்டிருந்தால் பாதுகாப்பாக இருக்க முடியாது. அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா என்ற யோசனையில் தான் மக்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பாஜக ஆட்சியில் இருக்கிற மணிப்பூரில் அது தான் நிலைமை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை அங்கு உள்ளது. 

இங்குப் பெண் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் போது, முதலமைச்சர் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார் என்ற மன நிம்மதியோடு பெண்கள் உள்ளனர். நாட்டிற்கு  எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். நாடு அமைதியான ஒரு நாடாக வளரக்கூடிய ஒரு நாடாக நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக இந்த நாட்டை மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது. 

நம்முடைய அரசியலமைப்பு சட்டம், அண்ணல் அம்பேத்கர் நமக்குத் தந்த இந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் ,தூக்கி எறிய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதைத் தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் பாஜகவுடைய எண்ணமாக இருக்கிறது. இந்த அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால் நமக்குப் பேச்சுரிமை கிடையாது, எழுத்துரிமை கிடையாது, நமக்காக எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. அரசியலமைப்பு சட்டம்தான் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று, அதை நாம் காப்பாற்றவேண்டும் என்ற உறுதியோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.அந்த உணர்வோடு இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *