• November 1, 2024

ஆலங்காட்டு ரகசியம்…

 ஆலங்காட்டு ரகசியம்…

நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டருளுகிறார்.

இக்கோவில் , ரத்தின சபை என்று போற்றப்படுகிறது.

சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது…

சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.

வெகு அருகே வந்துவிட்ட காரைக்கால் அம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என  சிவபெருமான் கேட்டபோது.!!

அதற்கு காரைக்கால் அம்மையார், எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார். அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.

அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான். காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோவிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னதியை எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.

அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான். சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்கால் அம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.

இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.இதுவே, ஆலங்காட்டு ரகசியம்

இந்த திருத்தலம் சிவன் கோவிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர். நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர். சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள். இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்பட்டது. இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.

இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.

சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார். இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது. இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது. அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது. இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார். சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.

நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது. இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்..!!

தகவல்: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *