கிராம கோவிலில் அம்மன் நகைகள் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் அக்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயின், கண் மலர், மூக்குத்தி ஆகியவற்றை திருடி சென்று விட்டார்கள்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன் (41) என்பவர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம கோவில்களில் அடிக்கடி இதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன, ஓட்டபிடாரம் அருகே முப்பிலிவெட்டி கிராமத்தில் கண்மாய்க்கரை ஓரம் இருக்கும் மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிசென்ற சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, இதுவரையில் குற்றவாளிகள் பிடிபடவில்லை. எனவே கோவிலில் புகுந்து திருடும் கும்பலை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.