மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதியில் சாலை, குடிநீர் வசதி கோரி த.மா.கா.ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு 12 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த வீடுகளுக்கு செல்வதற்கு போதிய சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கரடுமுரடான பாதையில் தவழ்ந்து மிகவும் சிரமத்துடன் வீடுகளுக்கு செல்கின்றனர்.மேலும், அங்கு குடிநீர் வசதியும் இல்லாத நிலையில், கோடை காலம் என்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் வீடுககளுக்கு செல்வதற்கு வசதியாக சாலை வசதியும், நிரந்தரமாக குடிநீர் வசதியும் செய்து கொடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.. வட்டார தலைவர் கே.பி.ஆழ்வார்சாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி, நகர பொருளாளர் ஜி.செண்பகராஜ், பொதுச்செயலாளர் வி.எஸ்.ஏ.சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.