கமிஷன் கேட்கும் அதிகாரிகள்: எட்டயபுரம் தாசில்தாரிடம் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் புகார்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தாலுகா சிதம்பராபுரம் கிராமத்தில் செல்வமோகன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது ஆலையின் பெயருக்கு முன்பு ஓம் என்ற எழுத்தை சேர்த்து சிறிய மாற்றம் செய்ய இருப்பதால் அதற்கு அனுமதி கேட்டு செல்வமோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.4.2023 விண்ணப்பம் செய்தார்.
இதையெடுத்து பெயர் மாற்ற அனுமதிக்காக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அந்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எட்டயபுரம் தாலூகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகியும் தற்பொழுது வரை எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் செல்வமோகனின் விண்ணப்பம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வமோகன் பலமுறை கேட்ட போதும் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் பரமசிவம் தலைமையில் தாலூகா அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் தாசில்தார் மல்லிகாவிடம் வழங்கினர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சங்கக நிர்வாகிகள் வி.எஸ்.சேதுரத்தினம்,ஆர் வரதராஜன், ஆர் கோபால்சாமி ,கடலையூர் முத்துராஜ், கதிரவன்,முத்து, சின்ன கொம்பையா, அசோக், வரதராஜன், ஜோசப் ரத்தினம், ஆர் .செல்வ மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
சந்திப்புக்கு பிறகு நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-‘
சைனா லைட்டர், தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலை உயர்வு என தீப்பெட்டி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சிறிய பெயர் மாற்றம் செய்வதற்கு எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் 40 நாள்களுக்கு மேலாக அலைக்கழித்து வருகின்றனர்.
தொழில் வளம் மேம்பட வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும், ஆலையின் பெயரில் சிறிய மாற்றம் செய்யும் விண்ணப்பத்தினை பரீசிலனை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பணம் கொடுத்தால் மட்டும் தான் விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறும் நிலை உள்ளது. இது குறித்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.