கோவில்பட்டி நகரசபை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று 20-வது வார்டு பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.அவர்களுடன் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் பங்கேற்றார் வார்டிலுள்ள அனைத்து சுகாதார வளாகத்தையும் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், வார்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், தெற்கு பஜாரில் வேகத்தடை அமைக்க வேண்டும், வார்டில் உள்ள தண்ணீர் குழாய்களை பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வார்டில் குப்பைகளை தினமும் முறையாக அகற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நகரசபை ஆணையாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வார்டுக்கு அனுப்பி, ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.