தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு முகாம்; ஆண்களும், பெண்களும் திரண்டனர்
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட்டது. தூத்துக்குடி வ.உ. சி கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விருதுநகர், சென்னை போன்ற பல பகுதிகளில் உள்ள 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சுமார் 10 ஆயிரம் ஆண், பெண்கள் வரை தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அதில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று காலை வந்திருந்தனர்.
பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பணிக்காக தேர்வு செய்யப்படக்கூடிய இளைஞர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தகுதியாக வைத்திருந்தது.
பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு பல நிறுவனங்கள் ரூ. 10 ஆயிரம் முதல் 12,500, 13 ,500 15,000 என சம்பளத்தை நிர்ணயித்திருந்தது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமை கனிமொழி எம்.பி. தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலை இல்லை என்ற பற்றாக்குறையை போக்க அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
எனவே இங்கு வரக்கூடிய இளைஞர்கள் இளம்பெண்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய வேலையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் அது எந்த ஊராக இருந்தாலும் அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும். புதிய இடங்களில் வேலை பார்க்கும் போது தன்னம்பிக்கை கிடைக்கும் எனவே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இவ்வாறு கனிமொழி பேசினார்.
இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு இந்த வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் குறைந்த சம்பளத்தில் எப்படி இளைஞர்கள் வேலை செய்ய முடியும் என்பதை உணர்ந்து தனியார் நிறுவனங்களில் கூடுதல் சம்பளம் வழங்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என இளைஞர்கள் இளம்பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.