பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் வலியுறுத்தல்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கயத்தாறு வட்டாரக்கிளையில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி ஏ கே எஸ் சொர்ண மஹாலில் நடந்தது.
விழாவுக்கு வட்டாரத் தலைவர் அழகுலட்சுமி தலைமை தாங்கினார்..காளியப்பன் லீலாவதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கலை உடையார்,மாவட்டத் தலைவர் செல்வராஜ்,கல்வி மாவட்டச் செயலாளர் ரவீந்திரராஜன், கல்வி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில், பணி நிறைவு பெறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 12 பேருக்கு நினைவு பரிசு வழங்கி, கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார்.வட்டாரப் பொருளாளர் தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.
விழா முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மை பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு TET தேர்வு தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, தமிழக அரசு சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படாமல் உள்ளது. ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.
இந்தாண்டு இறுதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2013-ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் இல்லை. இதனால் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை ஏராளமாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரந்தரப்பணியிடமாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்களை கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். முன்பகை காரணமாக குற்ற சுமத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்


