பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாசுடன் அன்புமணி விவாதம்
![பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாசுடன் அன்புமணி விவாதம்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/9wKipYWqSK31p6JWbe8S-850x560.webp)
புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, மாநில இளைஞரணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை நியமனம் செய்வதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் முகுந்தன். இவர் பாமகவில் சேர்ந்து 4 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில், முகுந்தனை கட்சியின் மாநில இளைஞரணி நிர்வாகியாக ராமதாஸ் நியமித்துள்ளார்.
கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆன ஒருவருக்கு பொறுப்பு வழங்குவதால், நிர்வாகிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இதில் உடன்பாடு இல்லை.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவின்போது, சகோதரியின் மகன் முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆன ஒருவருக்கு பொறுப்பு வழங்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், ” இது நான் ஆரம்பித்த கட்சி.. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து பேசிய அன்புமணி ராமதாஸ், பனையூரில் எனக்கென்று தனி அலுவலகம் திறந்திருக்கிறேன் என்றார். அத்துடன், மேடையிலேயே செல்போன் எண்ணையும் அறிவித்தார்.
முன்னதாக ராமதாஸ் பேசுகையில் கட்சிக்கு இளைஞர் அணி பொறுப்புக்கு முகுந்தன் நியமிக்ப்பட்டு இருக்கிறார். என்று சொல்லியபோது அருகில் இருந்த அன்புமணி’ குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?” என்று முனங்கினார்/ தொடர்ந்து கையில் வைத்திருந்த மைக்கை மேஜையில் தூக்கி போட்டார்.
மேடையிலேயே ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
ராமதாஸ்-அன்புமணி இடையேயான கருத்து மோதல் நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கிறது. அது இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)