காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ .வலியுறுத்தல்

 காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ .வலியுறுத்தல்

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ள மானாவாரி நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

.இந்நிலையில் முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விங்கம்பட்டி கிராமத்துக்கு சென்றார்.பின்னர் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் விவசாயிகளுடன் டிராக்டரில் பயணம் செய்து , பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக செல்போனில் ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசி, விவரத்தை தெரியப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் முழுவதும் மானாவாரி நிலங்கள் தான். இதில், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து பயிர்களை விளைவிக்கின்றனர். அதிலும் குறித்த நேரத்தில் பருவமழை பெய்தால் மட்டுமே விவசாயிகள் மகசூலை எடுக்க முடியும்.அதனால் தான் இதனை வானம் பார்த்த பூமி என்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள், மான்கள் மானாவாரி நிலங்களில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதில், பன்றிகளை துரத்தச் சென்றால்,அவை மீண்டும் விவசாயிகளை தாக்க வருகின்றன. இதனை கடந்த சட்டமன்ற கூட்டங்களிலேயே எடுத்துக் கூறினேன். இந்தாண்டாவது, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தான் விவசாயிகளை காக்கும் விஷயமாக இருக்கும்.

இந்நிலையில், பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவதோடு, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேலும்,அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினேன்.

அந்த மனு வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அவர்களிடம் வந்த கடிதத்தில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நீல்போ என்ற மருந்து காட்டுப்பன்றிகள், மான்களை விரட்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கடிதத்தில் சொல்லி உள்ளார்களே தவிர, அதனை எப்படி பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. வெறும் அறிக்கை கொடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி.

டிச.9-ம் தேதி கூட உள்ள சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை அவசர முக்கியத்துவம் கருதி கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுக்க வேண்டுமென கடிதம் அனுப்பி உள்ளேன். ஆனால், 2 நாட்கள் தான் சட்டமன்ற கூட்டம் வைத்துள்ளனர். இதனை எடுக்கின்றார்களோ, பேச வாய்ப்பு கொடுக்கிறார்களோ மறுக்கின்றார்களோ என்பது முதல்வருக்கும், சட்டப்பேரவை தலைவருக்கும் தான் தெரியும். ஆனாலும், நான் இதற்கு போதிய அழுத்தம் கொடுப்பேன்.

மாவட்டத்தில் உள்ள 1.79 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இதில்,75 சதவீதம் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இவற்றில் 50 சதவீதத்துக்கு மேல் பயிர்கள் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்கதியாக உள்ளனர்.வருமுன் காப்பது தான் இந்த அரசின் கொள்கை எனக் கூறுகின்றனர். ஆனால்,அவர்கள் வருமுன் காக்கவில்லை. இனியாவது விவசாயிகளை காக்க வேண்டும். லிங்கம்பட்டியில் மட்டும் 1500 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியின் போது, மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்க, அரசே ரூ.400 கோடி ஒதுக்கி ஹெலிகாப்டர் மூலமாக மருந்து தெளித்து, விவசாயத்தை காப்பாற்றினோம். விவசாயம் குறித்து தெரியாவிட்டாலும் அதனை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உள்ளது. இதனை நான் அரசியலுக்காக சொல்லவில்லை. சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் பதியவைத்தேன்.

இவ்வாறு கடம்பூர் ராஜு  கூறினார்.

ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி,ஒன்றிய அதிமுக செயலாளர் அழகர்சாமி,நகர்மன்ற உறுப்பினர் கவியரசன்,ஒன்றிய கவுன்சிலர் ராமர்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் விக்னேஷ்,அதிமுக நிர்வாகிகள் மணியாச்சி மாரிமுத்து பாண்டியன்,பழனி முருகன்,மாரிமுத்து பழனிசாமி,முருகன் உள்ளிட்ட பலர் கடம்பூர் ராஜுவுடன சென்று இருந்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *