பெருமளவில் கொடி நாள் நிதி வழங்க முதல்-அமைச்சர் வேண்டுகோள்

 பெருமளவில் கொடி நாள் நிதி வழங்க முதல்-அமைச்சர் வேண்டுகோள்

இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார்.

கொடி நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தம் பெற்றோரையும், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், “படைவீரர் கொடி நாள்”. இக்கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

நாட்டின் எல்லைகளையும், நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். ஏனையோர் எப்பொழுது எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணிப் பணியாற்றுகிறார்கள்.
இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு ராணுவ வீரர்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பினை நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ராணுவ வீரர்களுடைய குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பொருள் உதவியும், பிற உதவிகளும் செய்திட வேண்டும் என்பதை நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்தக் கொடி நாள் நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

பல நலத் திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலன் காப்பதில், நமது மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே. இவ்வாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நம் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *