நாட்டு பற்றற்ற பி.ஜே.பி. அரசை மக்கள் தூக்கி வீசுவார்கள்; விளாத்திகுளத்தில் கனிமொழி பேச்சு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று விளாத்திகுளம் சிவஞானபுரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் களம் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொது மக்களின் குறைகளைக் கேட்டு அறிந்து நிவர்த்தி செய்திருக்கிறோம். அந்தந்த கிராமங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். மேலும் மகளிர் கடன் தொகை வழங்குதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை பொது மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
பாஜகவும், அதிமுக இரு கட்சியும் திமுக அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக பெரிய ஸ்டிக்கர் கட்சி, அதிமுக சிறிய ஸ்டிக்கர் கட்சி, இந்த இரண்டு ஸ்டிக்கர் கட்சிகளும் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டிக் கொள்ளும்.
இப்படி திமுகவின் திட்டங்களை தங்களது திட்டங்கள் என்று கூறுவதற்கு பதிலாக மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்து வாக்கு கேளுங்கள் அல்லது எதுவும் செய்யவில்லை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு வாக்கு கேளுங்கள்.
மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த நிதியும் வழங்குவதில்லை.மாறாக ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகளை மட்டும் வாங்கிக் கொள்கிறது.
பாஜக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கேஸ் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது.இதனால் இந்தியா முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் விலை 500 ஆக குறைக்கப்படும் பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது வழக்கில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்து முதல் கையெழுத்துப் போடப்படும். மேலும் கல்விக்கடன் விவசாயக் கடன் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பல வட மாநிலங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஏழை குழந்தைகள் மருத்துவராக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகள் கொண்டுவரப்பட்டு தற்போது தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. பிஜேபி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் உயர்கல்வி பின்தங்கிய நிலையில் உள்ளது.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை மக்களின் கல்வியை பிஜேபி அரசு பிடுங்க நினைக்கிறது. நீட் தேர்வைப் போன்று அனைத்து கல்லூரிகளிலும் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கு பிஜேபி அரசு நினைக்கின்றது. இப்படிப்பட்ட மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் பிஜேபி அரசை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன அரசு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதற்கு சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கை எடுக்காமலும் பிஜேபி கட்சி நாட்டின் மீது பற்று இல்லாமல் உள்ளது. இப்படிப்பட்ட நாட்டு பற்றற்ற பிஜேபி அரசை நாட்டு மக்கள் அனைவரும் தூக்கி வீசுவார்கள்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வரை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வருவதற்கும் நாடு முழுவதும் மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வருவதற்கும் மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இரண்டாவது முறையாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் என்னை மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.