• November 1, 2024

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 21 அரசு அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கியது

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 21 அரசு அதிகாரிகளிடம்  விசாரணை தொடங்கியது

பைல் படம்

 தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின்  பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்று கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது, அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர். .

இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அடுத்த விசாரணையின்போது ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பது தெரியவில்லை. அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள காவல் துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்சினை ஏற்பட்டபோது, அதனை திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர். அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குளுக்க ஆளானார் என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *