குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
அதிமுக வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :-
புரட்சி தலைவர் மறைவுக்கு பின்பு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தார்கள் , புரட்சி தலைவி கட்சியை கொடியை மீட்டு சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
அம்மா வழியில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு 2 கோடி தொண்டர்களை வரை அதிகரித்து மிக பெரிய இயக்கமாக வளர்த்து உள்ளார்.
கழக பொதுச் செயலாளர் தலைமையில் மாவட்ட மேற்பார்வையாளர் கூட்டம் , 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் கள அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.கழக பொதுச் செயலாளர் தெளிவாக சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஆட்சியா நடக்கிறது, பொம்மை முதலமைச்சர் அவர் காவல் துறையினரை முடக்கி விட்டு போதையை தடுக்க முடியவில்லை. துப்பாக்கி , பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம் உள்ளது அவற்றை எல்லாம் சரி செய்யவில்லை.
ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு, பொது மக்களுக்கு என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
திரைத்துறையில் லட்சகணக்கானோர் பணி புரிகின்றனர். எங்கள் ஆட்சியில் அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தது.
தற்போது, ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு லியோ படத்தை கொடுக்க வேண்டும் அதற்கு தான் இப்படி செய்கிறார்கள்.
எதாவது படம் எடுத்தால் ரெட் ஜெயன்ட் கேட்கும் அடி மட்ட விலைக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
சர்வாதிகாரம் திரைத்துறையில் கோலோச்சபடுகிறது. திரைத்துறையில் உள்ளவர்கள் எதிர்த்து பேச வேண்டும்.
ஆட்சியாளரை மனதில் கொண்டு தான் காவல்துறை செயல்பட வேண்டும். எங்கள் ஆட்சியில் முழுமையாக காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது காவல்துறையினரை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
குழந்தை கடத்தல் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது என்றால் இதை கட்டுப்படுத்துவது அரசின் வேலை. திமுக ஆட்சியில் தற்போது பாலியல் வன்முறை அதிகமாகியுள்ளது.
விதவிதமான காய்ச்சல் திமுக ஆட்சியில் தான் வருகிறது. மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் இதெல்லாம் இந்த ஆட்சியில் தான் வந்துள்ளது.
10 மாதங்களாக சுகாதாரத்துறை தூங்கிட்டு தான் இருக்கிறது. அமைச்சர் சுப்பிரமணியன் ஓட மட்டும் தான் செய்கிறார்.
சமூகத்திற்கு ஒவ்வாத விசயங்களை திரைத்துறையில் கொண்டு வந்து அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
காவிரி பிரச்சினையில் திமுக அரசு கோட்டை விட்டுவிட்டது. காலம் கடந்த செயல் இது. குறுவையை பாதுகாத்து இருக்கலாம், எதிர்பார்த்த அளவு மானியம் கொடுக்கவில்லை.
விவசாயிகள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மனித உரிமை பிரச்சினை காகிதம் மூலம் முடிக்கக்கூடியது அல்ல.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.