எம் சாண்ட், ஜல்லி,உடை கல் விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு


கோவில்பட்டி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூடப்பன்,செயலாளார் காளிராஜ், பொருளாளர் பிரபு என்ற கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் முத்துராமன் ,துணை செயலாளர் பாரதி ரவிக்குமார்,துணை பொருளாளர் செந்தில்குமார் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கடந்த 15-ம் தேதி முதல் கிரிஷர் மற்றும் குவாரிகளில் எம் சாண்ட் மணல் டன்னுக்கு ரூ.1000, ஜல்லி டன்னுக்கு ரூ.900 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உடை கல் யூனிட்க்கு ரூ.1400, கிராவல் யூனிட்டுக்கு ரூ.800 என உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான மைன்ஸ் உரிமத்துக்கு (mines pass) ரூ.3600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு டன் எம் சாண்ட் மணல் ரூ.600 ஆகவும், ஒரு டன் ஜல்லி ரூ. 500 ஆகவும், ஒரு யூனிட் உடை கல் ரூ.900 ஆகவும், ஒரு யூனிட் கிராவல் ரூ.550 ஆகவும், மைன்ஸ் உரிமம் ரூ.900 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் இந்த மாதம் திடீரென இதன் விலைகளை இரு மடங்கு வரை உயர்த்தி உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், லாரி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கிரசர் மற்றும் குவாரிகளில் அவர்கள் நினைத்த விலையை வைத்துள்ளனர். இதனை தவிர்த்து அனைத்து கிரசர் மற்றும் குவாரிகளில் ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், உயர்த்தப்பட்ட கட்டுமான பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்,

