வேட்டையன்-சினிமா விமர்சனம்
![வேட்டையன்-சினிமா விமர்சனம்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/67078e1126250-vettaiyan-hits-theatres-thalaivar-fans-share-their-takes-101927930-16x9-1-850x533.webp)
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வந்து இருக்கிறது வேட்டையன்…..
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அதேபோல் சமூக பிரச்சி னையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்து அசத்தியுள்ளார்.
இது சூப்பர் ஸ்டார் படமாக இருக்குமா… அல்லது ஞானவேல் படமாக இருக்குமா என நினைத்தால் ரஜினி படமாகவும் இருக்கிறது. ஞானவேல் படமாகவும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் ஆபிசர். படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்குகிறது. அந்த மாவட்ட எஸ்பியான ரஜினி என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். பாரபட்சம் பார்க்காமல் அநியாயம் செய்பவர்களை சுட்டுத்தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில் ஆசிரியையாக இருக்கும் துஷாரா கஞ்சா கும்பலால் இன்னலுக்கு ஆளாகும்போது எஸ்பியால் காப்பற்றப்படுகிறார்.
அதன்பிறகு அவர் சென்னைக்கு மாறுதலாகி சென்று அங்கு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொன்றது யார் என்று விசாரிக்கும் தனிப்படை போலீஸ் ஒரு வாலிபரை பிடித்து இவன்தான் குற்றவாளி என முடிவு செய்கிறது.
ஆனால் அவன் நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறி தப்பித்து ஓடுகிறான். அவனை கொல்லவும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டான ரஜினி சென்னை செல்கிறார். அங்கு எற்கனவே விசாரித்த தனிப்படையினரும் சேர்ந்து அவனை கண்டபிடித்து சுட்டுத்தள்ளுகிறார்.
இதை மனித உரிமை ஆணைய கமிஷனரும் நீதிபதியுமான அமிதாப் பச்சன் தவறு செய்துவிட்டீர்கள் என புரிய வைக்கிறார். அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? அவனை ரஜினி கண்டு பிடித்தாரா? கண்டுபிடித்து அவனையும் என்கவுண்ட்டர் செய்தாரா அல்லது சட்டத்தின் பிடியில் விட்டாரா என்பது கிளைமாக்ஸ்.
ஒரு சமுதாய பிரச்சனையை கமர்சியலாக கொண்டு சென்று மீண்டும் பாராட்டை வாங்கி இருக்கிறார் ஞானவேல். அவரைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு எடுத்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இருக்கிறது திரைக்கதை.
அதற்கு ரஜினி என்ற மாஸ் பலமாக அமைந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக ரஜினியின் நடை, உடை, பாவனை என அனைத்துமே வேற லெவல். இதுவரை ரஜினி பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொன்றிலும் தனி ஸ்டைல். இதிலும் அப்படித்தான்.
‘குறி வச்சா இரை விழாமல் போகாது’ என்று என்கவுண்ட்டர் செய்து முடித்ததும் பேசும் பஞ்ச் டயலாக் ரசிகர்களை விசில் போட வைக்கிறது.
இந்த வயதிலும் அவரது எனர்ஜி வியக்க வைக்கிறது. மனசிலாயோ பாடலில் அதிக ரிஸ்க் எடுக்காமல் செய்யும் அந்த மூவ்மெண்டஸ் ரசிக்க வைக்கிறது.
படத்தில் அடுத்தபடியாக அமிதாப் பச்சன் என்கவுண்ட்டருக்கு எதிரான மனப்பான்மை கொண்டவராக தன் கேரக்டரை நிலை நிறுத்தி இருக்கிறார்.
ரஜினிக்கும் அவருக்கும் நடக்கும் வாக்குவாதங்கள் தொடர்பான காட்சி படத்தின் ஹைலைட். ரஜினி கூடவே வரும் பகத் பாஸில் புது பரிமாணத்தை காட்டி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு கேரண்டி. நடிப்பு அரக்கனாக வரும் பகத்பாசில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
அதே போல் போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் கம்பீரமான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் துஷாராவின் கதாபாத்திரமும் அவருடைய நடிப்பும் கைத்தட்டலை பெறுகிறது.
அடுத்தபடியாக ரஜினியின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர். இவருக்கு முதல் பாதியில் பெரிய அளவில் வேலை இல்லை ஆனால் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்துவிட்டார். மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடி இளசுகளை துள்ள வைக்கிறார். பார்ப்பவர்களை உட்கார விடாமல் ஆட வைத்திருக்கிறது இந்த பாடல். நிச்சயம் இது ரசிகர்களுக்கான விஷுவல் ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.
வில்லனாக ராணா டகுபதி மிரட்டியுள்ளார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.
படத்தில் முதல் பாதி செம விறுவிறுப்பு. இரண்டாம்பாதியில் கதைக்குள் சென்று வருவதால் சற்று தொய்வு. ஆனால் கிளைமாக்ஸ் சூப்பர்.
படத்துக்கு மிகப்பெரிய பலமாக அனிருத்தின் இசை அமைந்துள்ளது. மேலும் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான வசனங்களும் பெரும் பலம்.
இப்படி பல நிறைகள் இருந்தாலும் சிறு குறைகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படத்தில் சொல்லப்பட்ட நீதி ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது. ஆக மொத்தம் வேட்டையன்-தரமான சம்பவம். குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்…
–கடையம் ஆர்.ரவி
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)