• May 2, 2024

வேளாண்மை துறை, பருவத்திற்கு ஏற்ப விதைகள் வழங்குவதில்லை; கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டு

 வேளாண்மை துறை, பருவத்திற்கு ஏற்ப விதைகள் வழங்குவதில்லை;  கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டு

.கோவில்பட்டி கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆடிபெருக்கை முன்னிட்டு விதைப்பு பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். புரட்டாசி முதல் வாரம் சிறுதானியங்கள் விதைப்பு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேளாண்மை துறை பல்வேறு விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிவந்தாலும் நிர்வாக கோளாறு காரணமாக பருவத்திற்கு ஏற்ப வழங்குவதில்லை. மாறாக விதைப்பு முடிந்தபின்னரே ஒருசில விதைகள் மற்றும் கருவிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க விற்பனைக்கு வருகின்றன.
காலம் கடந்து வழங்கப்படும் விதைகள், உரங்கள், ராசாயன மருந்துகள், இயற்கை மருந்துகள் சொட்டு நீர்பாசன தெளிப்பான்கள் அனைத்தும் பயனின்றி போய்விடுகிறது. அதன் தரமும் கேள்விக்குறியாக உள்ளது. தவிர விவசாயிகள் விரும்பும் விதைகள், மருந்துகள், உரங்களும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் விதை கடைகளையே நாட வேண்டி உள்ளது.
இந்தாண்டு முதன்முதலாக வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் தேசிய விதை கழகம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மக்காச்சோளம் விதைகள் 4 கிலோ கொண்ட ஒரு பை அரசின் 50% மானியம் போக ரூ 300/= அதனுடன் விதைநேர்த்தி உரம் ஒரு பை சேர்த்து ரூ 450/= க்கு வழங்கப்படுகிறது. தேசிய விதை கழகம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்காச்சோளம் விதையின் தரம் மற்றும் விளைச்சல் குறித்து விவசாயிகளுக்கு அரசு விளக்க வேண்டும். தற்போது விற்பனை செய்யப்படும் இவ்விதை கடந்தாண்டுக்குரிய ஒதுக்கீடு எனவும், நடப்பாண்டு ஒதுக்கீடு இன்னும் வரவில்லை எனவும் கூறுகின்றனர்.
நடப்பாண்டு வர வேண்டிய விதைகளை அதிகாரிகள் புரட்டாசி பட்டத்திற்கு முன்பு வழங்கினால் மட்டும் பயனுள்ளதாக இருக்கும். தவிர இதர சிறுதானியங்களான வெள்ளைச் சோளம், கம்பு ,குதிரைவாலி, கேழ்வரகு,பயறு வகைகளான உளுந்து, பாசி, துவரை, எண்ணெய்வித்து சூரியகாந்தி விதைகளும் வீரிய ஒட்டு ரக விதைகளாக வழங்க வேண்டும். மாதிரி விதைப்பண்ணையில் விதை உற்பத்தி செய்வதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஸ்பிக் நிறுவனம் டி.ஏ.பி. உரம் தனது உற்பத்திதிறனை அதிகரித்து தொய்வின்றி இயக்கி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டி.ஏ.பி. அடி உரம் வழங்க வேண்டும்.
ஒரு சில தனியார் விதைக்கடைகளில் 50 கிலோ கொண்ட ஸ்பிக் டி.ஏ.பி. மூட்டை ரூ 1350/= என்பதை ரூ 1800/= வரை விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே கடந்தாண்டு விலையை விட மூட்டைக்கு ரூ100/= அதிகரித்துள்ளது. அரசு முன்கூட்டி ஆகஸ்டு மாத இறுதிக்குள் டி.ஏ.பி. உரத்தை போதிய அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். தவிர தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பணிபுரிகின்ற உதவி வேளாண் அலுவலர் மூலம் விவசாயிகள் பயிரிடும் நிலத்திற்கு ஏற்ப உரம் ஒதுக்கீடு செய்து தனியார் கடைகளில் பெற்றுக்கொள்ள அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.
இதன்மூலம் செயற்கை தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பதை தடுக்க முடியும். தவிர 2020-2021 ம் ஆண்டு கடும் மழை காரணமாக விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பயிர்களுக்கு உரிய காப்பீடு செய்யப்பட்டது. அதற்குரிய இழப்பீட்டு தொகை பாசி, சோளம், மிளகாய், கம்பு ஆகியவற்றுக்கு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர். வரும் பருவ ஆண்டில் பயிர்செய்ய கையில் பொருளாதாரம் இன்றி தவிக்கின்றனர், விதைப்புக்கு முன்னர் பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறி உள்ளார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *