• April 29, 2024

இலங்கை புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வருகிறார்

 இலங்கை புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வருகிறார்

இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து நேற்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26-வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6-வது முறையாக அவர் பிரதமர் ஆகி உள்ளார்.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த பயணம் அமையலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *