• March 29, 2024

தீவிரவாதியின் மனமாற்றம் … (சிறுகதை)

 தீவிரவாதியின் மனமாற்றம் … (சிறுகதை)

அந்த மலையடிவாரமே பரபரப்பாக இருந்தது .ராணுவவீரர்களின் கண்களில் தீப்பொறி பறந்தது.. .என்ன ஆச்சு…? ஏதாவது தகவல் கிடைத்ததா…?
ராணுவ தளபதி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தகவல் சொல்கிறோம் என்று பதட்டத்துடன் நின்றனர் அதிகாரிகள்.
குயிக்… குயிக்… எல்லா இடத்திலேயும் தேடுங்க… நேரமாகிக்கொண்டிருக்கிறது. ..ஸ்கூலில் விசாரிச்சிங்களா. என்ன சொன்னாங்க. .. என்று கேட்ட ராணுவ தளபதி. பதிலுக்காக …அதிகாரிகள் முகத்தை பார்க்க.
ஸ்கூல் முடிஞ்சு ராணுவ ஜீப்பில் சரியா நான்கு மணிக்கு புறப்பட்டு இருக்காங்க…இன்னும்வரல…வேறு தகவல் கிடைக்கல…என்று விழுங்கினார்கள்.
வாட்…வாட்…எப்படி…எங்கே..என்று கடுகடுத்த குரலில் கேட்க.. மலையடிவாரத்திலே திரும்பும்போது ஜீப் கடத்தப்பட்டிருக்கு…என்று சொல்ல ராணுவதளபதி உஷ்ணமானார்.
எப்படி…இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி…இது நடந்தது என்று படபடக்க…எந்திர துப்பாக்கி முனையில்..டிரைவரை சுட்டுக்கொன்று கீழே தள்ளிவிட்டுவிட்டு…பையனை மட்டும் …என்று வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க.. ராணுவதளபதி மேலும் சூடானார்.
ரஞ்சித் அவரது ஒரே மகன்… அவன் கடத்தப்பட்டிருக்கிறான்.. பத்து வயது…பட்டாம்பூச்சியாய் பறக்கும் பருவம்..முல்லைப்பூ புன்னகை…ரோஜாபூ முக முக வண்ணம்…

நேரம் கடந்தது…நோய்வாய்பட்ட மனைவிக்கு என்னபதில் சொல்வது…சரியாக நான்கு மணிக்கு வரும் மகன் எங்கே..கடத்தப்பட்டான் என்பதை கேட்டால்…மனைவி இதயம் தாங்குமா…ஓ…ஓ..ராணுவ தளபதி மனதில் ஆயிரம் கேள்விகள்…
கடத்திசென்றது யார்..எதற்காக கடத்தினார்கள். ராணுவ ஜீப்பையே…ஒய்..ஒய்..மேஜையில் கைகளை ஓங்கி குத்தினார். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தோம்…பின்னே எப்படி நடந்தது…எங்கே தவறு நடந்தது..அவர் பார்வை …அதிகாரிகளை துளைத்தது.
அவர்கள் மவுனமானார்கள்.
ராணுவ ஜீப் மலையடிவாரத்தில் உள்ள ஒருபகுதிக்குள் நிற்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். தகவல் வந்தது. குயிக் மார்ச்…ராணுவ தளபதி சத்தமிட அவரது செல்போன் ஒலித்தது…
சார்…தீயோடு விளையாடாதீங்க…உங்க பையன் எங்ககிட்டதான் இருக்கான்…பதட்டப்படாதீங்க…பாதுகாப்பாக இருக்கிறான்.. என்று சொல்ல ராணுவ தளபதி கடுமையான குரலில் யார் நீ…என்று அதட்ட எதிர்முனையில் பேசியவன்….வார்த்தையும் தடித்தது.
நான் யார் என்பது முக்கியம் இல்லை.நான் என்ன சொல்லவர்ரேன் என்பதுதான் முக்கியம்…வெளிநாட்டு தீவிரவாதியை பிடிச்சி விசாரிச்சிக்கிட்டிருக்கீங்களே…அவரை ஒருமணி நேரத்திலே விட்டுறனும்.அவரை விட்டுட்டா..உங்க மகனையும் விட்டுறுவோம்..இல்லன்னா..ஹா…ஹா..ஹா..என்று எச்சரித்தான்.
ராணுவ தளபதி பற்களை கடித்தார். நோ…நோ…ஜீப் இருக்கிற இடத்தை சுற்றிவளையுங்க…
சுடுங்க..விடாதீங்க..என்றபோது மறுபடியும் செல்போன் ஒலித்தது.
எதிர்முனையில் பயங்கர குரல்…எதிரொலித்தது. ம்…எங்கள் இருப்பிடத்தை சுற்றிவளைக்க திட்டமிடுறீங்களா…ஹா..ஹா…நோயில்வாடும் மனைவி…பத்து வருடத்துக்கு பிறகு தவமிருந்து பெற்ற மகன்..இவர்கள் உங்களுக்கு முக்கியமில்லையா..பேசாம வெளிநாட்டு தீவிரவாதியைவிட்டுருங்க….நாங்க நாகப்பாம்பு கடிக்காமவிடமாட்டோம்…..
அரைமணி நேரம் டைம் கொடுத்தோம்..இனி டைம்மை குறைச்சிட்டோம்..பத்து நிமிடத்திலே லைனில் வருவோம் ..சரியான பதில் வரல…உங்க மகன் திரும்பிவரமாட்டான்..என்று மிரட்டியவன் இணைப்பை துண்டித்தான்.
ராணுவ தளபதி கோபத்தின் உச்சிக்கு சென்றார்.நாகப்பாம்பு…எதிர்முனையில் பேசியவன் பயன்படுத்திய வார்த்தை….அவரை உலுக்கியது.
வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் சேர்ந்து நாசவேலைகளில் ஈடுபடும் உள்நாட்டு தீவிரவாத அமைப்பு..அதன் தலைவன் நாக சேனன்..தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்களை கொண்டு செயல்படுபவன்…பயங்கரவாதி.
இரண்டு இடத்தில் வெடிகுண்டு வைத்து மக்களை கொன்றவன்…அவனது தீவிரவாதம்…நீண்டு கொண்டே போனது…ராணுவ தளபதி முகம் சிவந்தது.அந்த கும்பலை சுட்டுவீழ்த்த இதுதான் சரியான நேரம்…விடக்கூடாது..அவரது மனம் பரபரத்தது.
தீவிரவாதிகள் கையில் மகன்..உயிருக்கு போராடும் மனைவி…அவர் கண்முன்வந்து சென்றார்கள். நாட்டின்பாதுகாப்புதான் முக்கியம்..அதற்காக எந்த தியாகமும் செய்யலாம்..அவர்மனம் உறுதியான முடிவு எடுத்தது.
நிமிடங்கள் சென்று கொண்டிருந்தன. மலையடிவாரத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைக்க நெருங்கினர்.
மலையடிவாரத்தில் பழங்கால இடிந்த கட்டிடம். நாகசேனன் அவனது கூட்டாளிகள் எந்திர துப்பாக்கியுடன் அந்த கட்டிடத்துக்கு வெளியே கழுகுபார்வையுடன் நின்று கொண்டிருந்தனர்..
அவர்கள் கடத்திவந்த ராணுவ ஜீப் மரத்தின் அடியில் நின்றது.வேறு யாரும் வருகிறார்களா என்று மோப்பம் பிடித்தபடி நாக்கை தொங்கவிட்டபடி ராட்சத நாய்..எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்..என்ற நிலை.அந்த இடம் பதட்டத்துடன் இருக்க…நிமிடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் ராணுவதளபதியின் மகன் அடைக்கப்பட்டிருந்தான்.அவனிடம் எந்த பயமும் இல்லை.எதிரே இருந்த ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தான்…தீவிரவாதிகள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களையே வெறித்துபார்த்தான்.

அவன் இருந்த அறைக்கு வெளியே துப்பாக்கியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.ஜன்னல் வழியாக சிறுவனை எட்டிப்பார்த்து கத்தினான்.உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். சிறுவன் அவனை கண்டுகொள்ளவில்லை. சுவரையே பார்த்தான்.
பத்து நிமிடம் கழிந்தது..நாகசேனன்…செல்போனை எடுத்து பேசினான்.ஹா..ஹா..நான்கொடுத்த டைம் முடிந்தது.இறுதியாக சொல்கிறேன்…வெளிநாட்டு தீவிரவாதியை விடமுடியுமா..முடியாதா…உன் மகன் உயிர் என் கையிலே..சீக்கிரம் பதில் சொல்லுங்க..என்று எகிர…
ராணுவ தளபதி குரல் உஷ்னமாக வெளியேறியது. நோ…நோ..நோ….அதை கேட்ட நாக சேனன் சூடாகினான். ம்…அந்த ராணுவ தளபதிக்கு பாடம் கற்பிக்கும் நேரம்வந்து விட்டது.. அவன் மகனை பேசவைப்போம்..கதறிக்கொண்டுவருவான்…என்றபடி கட்டிட அறைக்கு வந்தான்.
கதவை திறந்தபடி சென்றவன்…சிறுவனை பார்த்து…ஹா..ஹா…டேய்..உங்க அப்பாக்கிட்ட பேசு…அப்பா என்னை காப்பாத்துங்க என்று கதறி அழு என்று செல்போனை நீட்டினான்.
லைன் கிடைத்ததும் சிறுவன் பேசினான்…எதிர்முனையில் ராணுவ தளபதி …இருந்தார்.சி றுவன் எந்தவித பயமும் இன்றி…அப்பா என்னைப்பத்தி கவலைப்படாதீங்க…அம்மாவை பாத்துக்குங்க..நாடுதான் நமக்கு முக்கியம் என்று பேச…நாக சேனன் கோபத்தில் செல்போனை பிடுங்கினான்.
.ஏய் இந்த சின்னவயசிலே..உனக்கு இவ்வளவு தைரியமா…ஏய் தாய் நாடு ஒழிகனு சொல்லு என்றான்.அவன் தாய் நாடுவாழ்க என்று சொன்னான்.
அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தான்.தாய்நாடு ஒழிக சொல்லு…என்று அவன் மிரட்ட சிறுவன் தாய்நாடுவாழ்க என்று ஓங்கி சொன்னான்.
நாகசேனன் ஆத்திரத்தில் எரிந்து கொண்டிருந்த கட்டையை எடுத்து காட்டி ஏய்…தாய் நாடு ஒழிக சொல்லு என்று மிரட்ட சிறுவனோ..தாய்நாடு வாழ்க என்று உரத்த குரலில் சொல்ல நாகசேனன் ஆத்திரத்தில் சிறுவனின் கையில் நெருப்பு கட்டையைவைத்து சூடுவைக்கிறான்.அப்போதும் சிறுவன்…தாய்நாடுவாழ்க..தாய்நாடுவாழ்க என்று சொல்லிக்கொண்டே நிற்கிறான். அவன் கை எரிந்து புண்ணாகிறது..நாகசேனன் எரிச்சலில் தீக்கட்டையை வெளியே தூக்கிவீசினான். காலால் எட்டி உதைத்தான். மிதித்தான்.சிறுவன் தாய்நாடுவாழ்க என்றே சொன்னான்.
நாகசேனன் கதவை பூட்டிவிட்டு கண்ணில் அனல் பறக்க வெளியே வந்தான்.ம்..ஒரு சிறுவனை தாய்நாடு ஓழிக என்று சொல்லவைக்க முடியவில்லையே..என்று கால்களை தரையில் உதைத்தான்.

அவன் கண்களில் கொலைவெறி தெரிந்தது.ராணுவ ஜீப்பை கூர்ந்துபார்த்தான்.ம்..அந்த சிறுவன் நம்மிடம் இருக்கும்வரை நாம் சாதிக்கவேண்டியதை சாதிக்கலாம்…மிரட்டலாம்..சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நம்மை தாக்காமல் இருப்பார்கள்.நாம் விரைவில் வேறு இடத்துக்கு சிறுவனை தூக்கிசெல்லவேண்டும்.என்று நாகசேனன் எச்சரிக்கை உணர்வுடன் சொன்னான்.

எப்படியாவது வெளிநாட்டு தீவிரவாதியை ராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும் என்ன செய்யலாம் …என்று அவன் சிந்தித்தபோது தீவிரவாதிகளின் தலைவன் வெளிநாட்டிலிருந்து நாகசேனனிடம் பேசினான்..
வெல்டன் வெல்டன்..சிறுவனை கடத்திவந்தது பெரிய வெற்றி…ராணுவத்தின்பிடியில் இருக்கும் நம்ம ஆளை விடுவித்துவிட்டால் போதும்…அப்படியே நீங்கள் வெளிநாட்டில்வந்து செட்டிலாகிவிடலாம்…உல்லாச வாழ்க்கை..சொர்க்க போகம் உங்கள் கையில்..அந்த சிறுவனிடம் நைசாக பேசி ராணுவ தளபதியிடம் நம்ம ஆளைவிட்டுவிட்டும்படி சொல்லவையுங்கள்…
என்னைப்பற்றிய தகவல் எதுவும் வெளியேவரக்கூடாது…ஓ.கே..என்று பேசிவிட்டு இணைப்பை துண்டித்தான். அதை கேட்டதும் நாகசேனுக்கு உற்சாக மூடுக்கு வந்தது. இதைமுடிச்சிட்டா வெளிநாட்டில் செட்டில் ஆகிடலாம்…
ஆ ..என்று குதித்தான்.
அந்த சிறுவனுக்கு பசி இருக்கும்..ரொட்டியும் டீயும் கொடுங்கள்…அவன் சாப்பிட்டபிறகு நான்வந்து அவனிடம் பேசுகிறேன் என்று நாகசேனன் மெல்ல சொன்னான்.
ஒருபெட்டியில் இருந்த ரொட்டியை எடுத்த ஒருவன் சிறுவன் இருந்த அறையை நோக்கிச்சென்றான். கதவை திறந்து உள்ளே சென்ற அவன் அந்த சிறுவனிடம் ரொட்டி துண்டை நீட்டினான். தம்பி…இதை சாப்பிடு என்று கொடுத்தான்.
சிறுவன் வாங்கினான்.அவன் கதவை பூட்டிவிட்டு சென்றான். அடுத்த நிமிடம் ஜன்னல் வழியாக அந்த ரொட்டித்துண்டை வீசினான்.வெளியில் நின்ற நாய் ஓடிவந்து அந்த ரொட்டித்துண்டை கவ்வியது. சிறுவன் அதை கூர்ந்து பார்த்தான். ரொட்டித்துண்டை தின்ற நாய் கீழே சுருண்டுவிழுந்தது… அதன்வாயிலிருந்து நுரை தள்ளியது. தீவிரவாதிகள் அதை கவனிக்காமல் அவர்கள் சாப்பிடுவதற்கு ரொட்டித்துண்டை வாயில் வைக்க முயன்ற நேரம்…
அறைக்குள்ளிருந்த சிறுவன் கத்தினான்.ரொட்டி துண்டை சாப்பிடாதீங்க..அதிலே விஷம் இருக்கு..என்று கத்தினான். அவர்கள் அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையை நோக்கினார்கள். விஷம் என்ற வார்த்தை அவர்களை நிலைகுலைய செய்தது.
நாய் சுருண்டுவிழுந்து துடித்துகொண்டிருப்பதை பார்த்து அதன் அருகே ஓடினார்கள். அதன் வாயில் ரொட்டித்துண்டு இருந்தது. நுரைதள்ளியபடி கிடந்த அந்த நாய் அவர்கள் கண்முன்னே துடிதுடித்து இறந்தது…நாகசேனனும் அவன் கூட்டாளிகளும் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தனர்.
விஷ ரொட்டி எப்படி வந்தது…அவர்கள் கண்களில் தீப்பொறி…யார் அந்த கறுப்பாடு…
அவர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பவன் …அங்கிருந்து நைசாக நழுவி ஓடமுயல அவனை அமுக்கிபிடித்தார்கள்.
துப்பாக்கி முனை அவன் நெற்றியை குறிவைக்க அவன் உண்மையை கக்கினான். வெளிநாட்டில் இருந்து பேசும் தீவிரவாதிகளின் தலைவன்தான் விஷரொட்டி கொடுத்து அவர்களை தீர்த்துகட்ட சொன்னான் .வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை…சொர்க்கபோகம் உங்கள் கையில் என்று ஆசைகாட்டினான் என்று அவன் சொல்ல நாகசேனன் ஆடிப்போனான்.
துப்பாக்கி முனையை திருப்பிய நாக சேனன்… நெற்றியில் கைவைத்தபடி கீழே உட்கார்ந்தான்.அந்த சிறுவன் மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்…எல்லோரும் எமலோகம் போயிருப்போம்..
எப்படி அந்த சிறுவன்…நம்மளை காப்பாற்ற நினைத்தான்…ஒன்றுமே புரியலையே..நாம் செத்தா அவனுக்கு சந்தோஷம்தானே…எப்படி நம்மளை அவன் காப்பாற்றினான்…அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
நேராக சிறுவனை அடைத்துவைத்திருந்த அறை கதவை திறந்தான்.
சிறுவன் தீக்காயம்பட்ட கைவலி தாங்காமல் ஊதிக்கொண்டிருந்தான். நாகசேனன் சிறுவனைப்பார்த்து தம்பி.. நாங்க உள்நாட்டு தீவிரவாதிகள். எங்களை அழிக்க நினைக்காமல் ஏன் காப்பாற்ற நினைத்தாய் என்று கேட்டான்.
சிறுவன்…மெல்ல..நீங்க நம்ம தாய்நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு சதிகாரர்களின் தூண்டுதலால் இங்கே தீவிரவாதிகளாகி சொந்த நாட்டுக்கே தீங்கு செய்கிறீர்கள். குண்டுவைத்து சொந்த நாட்டு மக்களையே அழிக்கிறீர்கள். உங்களை அழிப்பதைவிட திருத்துவதே மேல் என்று நினைத்தேன்.உங்களை காப்பாற்றினேன் என்றான்.

தம்பி உனக்கு இருக்கும் தாய்நாட்டு சிந்தனைகூட எனக்கு இல்லாமல் போய்விட்டதே..இதே கையில் எத்தனை இடத்தில் குண்டுவைத்திருக்கிறேன்..வெளிநாட்டு தலைவன் சொன்னதால் அதை செய்தேன். கடைசியில் அவனே எங்களை கொல்ல விஷரொட்டி ஏற்பாடு செய்துவிட்டான்…பாவி..என்று கத்தினான்.

அடுத்து சிறிது நேரத்தில் ராணுவ தளபதியின் செல்போன் ஒலித்தது. வேகமாக எடுத்தார்.எதிர்முனையில் கரகரத்த குரல்…நாங்கள் சரண் அடைகிறோம்..என்றான் நாகசேனன். ராணுவ தளபதி நம்பமுடியாமல் திகைக்க..நாகசேனன்…உண்மை. பொய்யில்லை…மலையடிவாரம் பாழடைந்த மாளிகை..நாங்கள் இருபது பேர் ஆயுதங்களுடன் சரண் அடைகிறோம்..என்க ராணுவதளபதி ஆச்சரியத்துடன் எப்படி இந்த மாற்றம்..என்று கேட்க..
எல்லாம் நாங்கள் கடத்திவந்த சிறுவன்தான் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் ராணுவதளபதி அங்கே ஆஜர் ஆனார். ராணுவ வேனில் நாகசேனன் மற்றும் அவன் கூட்டாளிகள் ஏற்றப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. ராணுவ தளபதி ஓடிவந்த தன்மகனை ஆரத்தழுவினார்.
தீக்காயம்பட்ட அவன் கையைபார்த்து கலங்கினார். இருவரும் ஜீப்பில் ஏறினார்கள்.ராணுவ வேன் புறப்பட அதன் பின்னால் ராணுவ தளபதியின் ஜீப் சென்றது..
சிறுவன் நடந்த கதையை ராணுவதளபதியிடம் சொன்னபடி வந்தான்…அவர் அதை கேட்டபடியே வந்தார்..ஒருபாலத்தில் ராணுவ வேன் செல்லமுயன்றபோது சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.
அந்த வேன் தூக்கிவீசப்பட்டது.நாகசேனனும் அவன் கூட்டாளிகளும் பாலத்தின் கீழே உடல்கருகி பிணமாக கிடந்தார்கள்.ராணுவ தளபதி அப்படியே நிலைகுலைந்து நின்றார்.
சரண்அடைந்த நாகசேனனும் அவரது கூட்டாளிகளும் உண்மையை கூறிவிடுவார்கள் என்று அவர்கள்வந்த வேனை வெடிகுண்டுவைத்து தீர்த்துவிட்ட வெளிநாட்டு சதிக்கும்பலின் தீவிரவாத நாக்குகள்…வேனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயின் ஜூவாலையில் தெரிந்தது.

வே.தபசுக்குமார், புதுவை

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *