தீபாவளி: சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
இந்தியா முழுவதும் தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. கடந்த ஆண்டு மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செய்ய பட்ட பட்டாசுகள் அதிகளவில் தேக்கமடைந்தது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90% விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்தனர்.
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தமிழ் நாடு உள்பட பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மழை காரணமாக, கடந்த ஆண்டை விட சிவகாசியில் 75% பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் உற்பத்தியான பட்டாசுகள் இந்தியா முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப் பட்டதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டை விட, பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.