சஷ்டி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?
சஷ்டி விரதம் இருப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ் கடவுளான முருப் பெருமானுக்குரிய திதி சஷ்டி. மாதத்தில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டிலும் வரும் சஷ்டி திதிகளிலும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். முருகனின் அருளை பெறுவதற்கு சஷ்டி விரதம் இருப்பார்கள். “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதனால் குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்தசஷ்டியின் போது தான் விரதம் இருப்பார்கள். ஆனால் மகா கந்தசஷ்டி மட்டுமின்றி, மாதந்தோறும் வரும் சஷ்டிகளிலும் விரதம் இருந்தால் முருகனின் அருளால் நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, தொழிலில் வளர்ச்சி இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லை, வறுமை தீரவில்லை, தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், வாழ்க்கையில் யாராவது ஒரு நபரால் தடைகள், பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், கஷ்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்கிறவர்கள் சஷ்டி திதியில் விரதம் இருக்கலாம்.
வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும், நல்ல விஷயங்களுக்காக சஷ்டி விரதம் இருக்கிறோம் என்கிறவர்கள் வளர்பிறை சஷ்டி திதியில் விரதம் இருக்க துவங்கலாம். கஷ்டங்கள், பிரச்சனைகள் தீர்ந்து போக வேண்டும் என்கிறவர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதத்தை துவக்கலாம்.
ஆனால் எந்த சஷ்டியில் விரதம் இருக்க துவங்கினாலும், முருகன் அருள் செய்வார். எந்த கோரிக்கையை முன் வைத்து சஷ்டி விரதம் இருந்தாலும் சரி அந்த கோரிக்கை நிறைவேறும் வரை அல்லது குழந்தைப் பேறு கிடைக்கும் வரை தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.