உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: டாக்டர் ச.மாரியப்பன் விளக்கம்
தற்காலிக, நிரந்தர உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது.
ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற எவ்விதமான காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணமும், தூசி படியாத வகையிலும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்கள் அல்லது அனுமதியற்ற ப்ளாஸ்டிக்குகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிட/விநியோகிக்கப் பயன்படுத்த கூடாது.
மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.
இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் கூறி உள்ளார்.