3 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று சாதனை
![3 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று சாதனை](https://tn96news.com/wp-content/uploads/2024/01/422315836_960191615467824_3756249538754220107_n-850x560.jpg)
அதிமுக அமைப்பு செயலாளராகவும், வடசென்னை தெற்கில் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் டி.ஜெயக்குமார். முன்னாள் அமைச்சரான இவர் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 தடவை வெற்றி பெற்றவர். இதனால் தொகுதி முழுவதும் நன்கு தெரிந்தவர். மேலும் இவரது அன்றாட பேட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள டி,ஜெயக்குமார் பழகுவதற்கு எளிமையானவர்.
ராயபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்தபோதும் சரி, பதவியில் இல்லாதபோதும் சரி தொகுதியில் கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அத்தனையிலும் பங்கேற்பது வழக்கம். கல்யாண வீடானுலும் சரி, துக்க வீடானாலும் சரி நேரில் சென்று விடுவார்.
ஒரே நாளில் இரண்டு திருமண நிகழ்ச்சி என்றால் எதற்கு போவது? எதை தவிர்ப்பது? என்று சிந்திக்கும் வேளையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காலையில் இருந்து மாலை வரை அழைப்பு விடுத்த அத்தனை பேரது வீட்டு திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். ராயபுரம் மட்டுமின்றி, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், முகப்பேர், திருமங்கலம், வடபழனி என சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
திருமண வீட்டாரை மகிழ்விக்கும் வகையில் நேரில் செல்வது மட்டுமின்றி மணமக்களுக்கு பரிசுபொருளும் தவறாமல் வழங்குவது வழக்கம். அத்துடன் திருமண வீட்டில் இசை கச்சேரி நடந்து கொண்டு இருந்தால், மைக்கை வாங்கி ஒரு எம்.ஜி.ஆர். பாடலை பாடிவிட்டு தான் கிளம்புவார்.
திருமண முகூர்த்த நாட்கள் என்றால் அதிக எண்ணிக்கையில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். கடந்த 3 முகூர்த்த நாட்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அதிமுகவினர் மத்தியில் இதனை சாதனை என்று கூறும் தொண்டர்கள் டி.ஜெயக்குமாரை அன்புடன் டி.ஜே. என்று அழைக்கிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)