நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
![நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/01/201911270357077875_141-feet-rise-Papanasam-Dam-is-nearing-completion_SECVPF.jpg)
பாபநாசம் ஆனி தோற்றம்,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் உச்ச நீர்மட்டம் 143.95 அடி. நீர் இருப்பு 141.95 அடி. அணையில் இருந்து வினாடிக்கு 1666 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் மணிமுத்தாறு அணைக்கு வரும் 1,458 கனஅடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதுதவிர தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது. இவ்வாறாக இன்று காலை நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை நீரானது ஆற்றில் செல்கிறது.
மலை பகுதியில் தொடர்மழையால் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு தடை நீடிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 35 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 31 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்து.
மாவட்டத்தில் சேரன் மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 5 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4.5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை கொட்டியது. அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 19 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் கொடுகிறது.’
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)