மக்களவை தேர்தல்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க கூடும் என்று தெரிகிறது. அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதம்தேர்தல் நடைபெறலாம்.
இதனிடையே தமிழகத்தில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி தொடங்கி அனைத்திலும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை பெற்றுக்கொண்ட கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலதா சிலைகளை வணங்கி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது, அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்,
ஏற்கெனவே மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை எடுத்து வரும்படி மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை கழகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 3 பெயர் பெயர்களை குறிப்பிட்டு பட்டியல் வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூறுகையில், “மக்களவை தேர்தல் நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் தொகுதிகளை விட்டுக் கொடுத்து அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்..
மேலும் “மக்களவை தேர்தலுக்கான குழு மற்றும் பொறுப்பாளர்கள் விரைவில் தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்று கட்சியில் இருந்து சிலர் விலகி நம்மிடம் வரவுள்ளனர் அவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என்று கேட்டுக்கொண்டார்.