உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோவில்பட்டியில் 3 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
![உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோவில்பட்டியில் 3 இடங்களில் நேரடி ஒளிபரப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG-20240107-WA0463-850x560.jpg)
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மத்திய பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநாடு தொடக்க நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், ஹூண்டாய், ஜே.எஸ்.டபிள்யூ, அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மேலும் பல
முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
மேலும், இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர், மற்றும் தென்கொரிய ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல் மற்றும் மனித வளம் ஆகியவற்றை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தி புதிய தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழா நிகழ்ச்சியின் நேரலை காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், சிட்கோ, சிப்காட் தொழில் வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜி.வி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் ஆகிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இது குறித்து தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கூறுகையில்” இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து கட்டமைப்பிலும் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு இது போன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தை முன்னணி மாநிலமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி ” என்று தெரிவித்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)