சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ; மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்குடன், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இன்றும் நாளையும், (7,8தேதிகள் )உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், 30,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மாநாட்டில் கலந்துகொள்ள வருகை புரிந்த தொழில் முதலீட்டாளர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிவ வாத்தியம் முழங்கியும், பம்பை உடுக்கை இசைத்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.