சாலைமறியல்: தூத்துக்குடி – மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
![சாலைமறியல்: தூத்துக்குடி – மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/01/mariyaltuty43.jpg)
தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தன. இதனால் மாநகர பகுதியில் வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
அதேபோன்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியிலும் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சோட்டையன் தோப்பு, குமரன்நகர், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சில தெருக்களில் 20 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.மேலும், மாப்பிள்ளையூரணி கிராமத்தில் பொதுமக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் குளத்தில் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி – மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.குளத்தில் கழிவுநீர் கலப்பது குறித்து பஞ்சாயத்து தலைவர் சரவணனிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படாத தொடர்ந்து தாங்கள் குளத்தின் தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வரும் நிலையில் தற்போது அந்த குளத்திலும் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் தலையிட்டு பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)