• May 9, 2024

கோயம்பேடு தே.மு.தி.க. கட்சி அலுவலக வளாகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்

 கோயம்பேடு தே.மு.தி.க. கட்சி அலுவலக வளாகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்

மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் உடல் ஏற்றிய வேன் ஊர்ந்து சென்ற காட்சி.

தொண்டர்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலை மரணம் அடைந்தார்.அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினர் குவியத்தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்தது. கூட்டம் அதிகரித்துகொண்டே  போனதால் இன்று காலை அங்கிருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. இதன் காரணமாக பிற்பகல் 2.45 மணி வரை தொடர்ந்து 8 ¾ மணி நேரம் விஜய்காந்த் உடல் அங்கு வைக்கபட்டு இருந்தது.

அதன்பிறகு இறுதி ஊர்வல ஏற்பாடுகள் நடந்தன. விஜய்காந்த் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த  வேனில் வைக்கப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முத்துசாமி பாலம் வழியாக ஈ.வே.ரா.பெரியார் சாலையில் திரும்பி, சென்டிரல், பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் ரோடு ஸ்கைவவாக், அமைந்தகரை, அரும்பாக்கம் வழியாக கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஊர்வலம் தொடங்கியதில் இருந்து வழிநெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கூட்டமாக வேனை நோக்கி ஓடிவந்து விஜயகாந்த் உடலை பார்த்து கும்பிட்டு மரியாதை செய்தனர். இதனால் வேன் மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் வேனின் வேகம் அதிகரிக்கப்பட்டது. ஊர்வலத்தில் நடந்து சென்றவர்கள் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தனர்.

பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்ட  இறுதி ஊர்வலம் 3 மணி நேரத்துக்கு பிறகு மாலை 6 மணி அளவில் கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஏற்கனவே கட்சி அலுவலக வளாகத்தில் உடல் அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் அங்கு கூடி இருந்தனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி அஞ்சலி
விஜயகாந்த் உடல்
கவர்னர் ரவி இறுதி அஞ்சலி
முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி
போலீஸ் அணிவகுப்பு மரியாதை
துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை

வேனில் இருந்து விஜயகாந்த் உடல் இறக்கி வைக்கப்பட்டதும், பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினர், ,முக்கிய நிர்வாகிகள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்பட பலர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு 24 போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் விஜயகாந்த் உடல், சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கூடி இருந்தவர்கள் கதறி அழுதனர். கேப்டன் புகழ் ஓங்குக என்ற கோஷம் பலமாக எழுந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *