பட்டாசு ஆலைகள், விற்பனை நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (20.10.2023) பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்களில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமிபதி கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் (எல்.இ.1) இருக்கின்றது. அதில் 15 கிலோவுக்கு கீழே உள்ள வெடி மருந்துகளை கையாளும் 9 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், 15 கிலோவில் இருந்து 500 கிலோ வரை வெடிமருந்துகளை கையாளும் 8 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையில் இருக்கின்ற பெசோ என்று சொல்லக்கூடிய அமைப்பின் மண்டல அலுவலகம் வழங்கியுள்ளது.
இந்த 17 பட்டாசு தொழிற்சாலைகளிலும், 165 தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் மற்றும் எல்.இ.5 என்று சொல்லக்கூடிய 184 பட்டாசு விற்பனை கடைகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீ தடுப்பு மற்றும் மீட்பு துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய 3 கோட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளில் விபத்து தவிர்க்கும் பொருட்டு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளான கடையின் கட்டுமானம் செங்கல், கல் அல்லது காங்க்ரீட் கொண்டு கட்டப்பட்டதாகவும் முழுவதும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். கடையானது குறைந்தபட்சம் 9 சதுர மீட்டரும் அதிக பட்சம் 25 சதுர மீட்டருக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். கடையானது தரைதளத்தில் இருக்க வேண்டும் தனி நுழைவு வாயிலும், தனி, அவசரகால வெளியேறும் வாயிலும் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கதவு வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
மேல் தளத்தில் குடியிருப்பும் அதனடியில் வெடிபொருள்கடையும் இருத்தல் கூடாது. கடையானது கைபடி சுவர் அருகிலோ அல்லது லிப்ட் (சுமைதூக்கி) அருகிலோ இருத்தல் கூடாது. கடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வெளியே கடைக்குரிய மெயின் சுவிட்ச் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வெடிபொருள் விற்பனை செய்யும் இடத்திற்கும் இருப்பு வைத்திற்கும் இடத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 3 மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட தொழில்கள் (மருத்துவமனைகள், பள்ளி கூடங்கள் போன்றவை) நடைபெறும் இடத்திற்கு இடையில் 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
நிரந்தர அனுமதி மற்றும் தற்காலிக அனுமதி பெற்ற பட்டாசு கடைகள் எதிரெதிரே இருக்கக் கூடாது வெடி வெடிக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் வெடி பொருட்கள் கடை இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் இரண்டு 10 கிலோ எடையுள்ள தீயணைப்பு கருவிகள் கடை வளாகத்திற்குள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 9 லிட்டர் அளவு கொண்ட தீ வாளி குறைந்த பட்சம் 5 எண்ணிக்கை (3 தண்ணீர், 2 மணல்) கடை வளாகத்திற்குள் வைக்க வேண்டும். எளிதில் தீயணைக்கும் வகையிலும், எளிதில் அணுகு சாலையை அடையும் வகையிலும், அணுகு சாலை ஆறு மீட்டர் அளவு அகலம் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கடை வளாகத்திற்குள் மின் வயர்கள் தேவையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. ஒரு வளாகத்திற்கும் அடுத்த வளாகத்திற்கும் இடையில் 15 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ள தொடர் விளக்குகள் தொங்கும் விளக்குகள் மற்றும் அதன் கட்டமைப்புகள் தீப்பொறியை ஏற்படுத்தும் அதனால் அதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிசன்ஸ், யுபிஎஸ் பேட்டரிஸ், ஜெனரேட்டர்ஸ், லிட் ஆசிட் பேட்டரிஸ், எண்ணெய் விளக்குகள் ஊதுபத்தி பயன்படுத்த கூடாது.
பட்டாசுகளை ஏற்றவும் இறக்கவும் கொண்டு செல்வதில் உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஈடுபடுத்த கூடாது. உரிமம் பெற்ற அளவைவிட பட்டாசின் இருப்பு அதிகமாக இருத்தல் கூடாது. உச்சநீதிமன்றத்தால் தடைய செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்தல் கூடாது (பேரியம் கலந்த கலவை பட்டாசுகள், தொடர் வெடிக்கும் சரவெடிகள்) என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலையில் மேற்கொள்ள வேண்டிய பொதுவான நடவடிக்கைகளான தனிப்பட்ட பட்டாசு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி அந்த இடத்திற்குச் செல்ல முடியும். பட்டாசு தொழிற்சாலையில் இடிதாங்கிகள் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். நிர்வாகம் தங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து வேலை செய்யும் அறைகளிலும் நல்ல செயல்திறன் உடைய தீயை அணைக்கும் கருவியை பராமரிக்க வேண்டும்.
இந்த அணைப்பான்களை அடிக்கடி சரிபார்த்து, வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க வேண்டும். வேலை நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை சோதனை செய்வதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள காய்ந்த புதர்கள், புற்கள், சிறு செடிகளை அகற்றி, கோடையில் ஏற்படும் வெப்பத்தால், அருகில் உள்ள ரசாயனக் கிடங்கு மற்றும் வேலை செய்யும் கொட்டகைகளுக்கு தீ பரவும் அபாயத்தை தவிர்க்க, நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலை வளாகத்திற்குள் ஆடுகள், தெருநாய்கள் மற்றும் விலங்குகள் சுற்றித் திரிவதை நிர்வாகம் தடுக்க வேண்டும். ஒவ்வொரு பட்டாசு ஆலையின் உரிமதாரர்கள், அனைத்து தொழிலாளர்களுக்கும் “குழு தனிநபர் விபத்துக் காப்பீடு” க்கான பிரீமியத் தொகையை நடப்பு ஆண்டு வரை செலுத்தியுள்ளனரா என்பதே சரிபார்க்கப்பட வேண்டும். பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மூலப்பொருள் தொழிற்சாலைக்குள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கெமிக்கல் எடை போடுதல், கரிதூசி , சல்பர், பொட்டாசியம் நைட்ரேட் டெக்ஸ்டரின் கிழங்கு மாவு., அலுமினியம் பவுடர் (333, 666, 999, பைரோ 40, பைரோ 60, பைரோ 90) ஆகியவைகளை அதற்குரிய தனி அறையில் வைக்க வேண்டும். கெமிக்கல்க
ளை எடை போடுவதற்கு கண்டிப்பாக பித்தளையிலான தராசு மற்றும் பித்தளையிலான படிக்கற்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கெமிக்கலை அதற்குரிய பெட்டியிலிருந்து எடுப்பதற்கு தனித்தனியான அலுமினிய கரண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கீழே சிந்துகின்ற கெமிக்கலை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். அலுமினிய பவுடர் டிரம்களை திறப்பதற்கு முன் முதலில் டிரம்மை வெளிப்புறமாகத் தொட்டு பார்த்து ஏதேனும் சூடு தெரிகிறதா என்பதை அறிந்து கொண்ட பின்னரே திறக்க வேண்டும்.அவ்வாறு ஏதேனும் சூடு தெரிந்தால் டிரம்மின் உள்ளே அலுமினிய பவுடர் நீர்த்து கொண்டு உள்ளது என்று அர்த்தம். இந்த நிலையில் டிரம்மை திறந்தால் அது தானாக வெடிக்கும் வாய்ப்புள்ளது. கெமிக்கல் எடைபோடும் அறையில் எடைபோடும் நபரைத் தவிர அந்த வேலைக்கு சம்மந்தமில்லாத பிற நபர்கள் செல்வது தவிர்க்க வேண்டும் என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
கெமிக்கல் அலசும், செலுத்தும் அறையினுள் செல்லும் முன்பாக அறைக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள நிலை மின்சார தகட்டில் கை வைத்து பின்பு தான் உள்ளே நுழைய வேண்டும். அறையின் உள்ளே குறைந்தது 3 மிமீ தடிமன் கொண்ட ரப்பர் சீட் சரியான முறையில் விரிக்கபட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கெமிக்கல் மிக்ஸிங், செலுத்தும் அறைக்குள் ஈரமான கால்களுடன் கண்டிப்பாக செல்லக்கூடாது. மிக்ஸிங் செய்யும் அறையில் கெமிக்கல் கலவையின் எடை அளவு 5 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக்ஸிங் செய்வதற்கு பித்தளையிலான வலைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கெமிக்கல் மிக்ஸிங் அறையில் 2 நபர்களுக்கு மேல் கண்டிப்பாக வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. மிக்ஸிங், செலுத்தும் அறையில் வேலை முடிந்த பிறகு அறையை நன்கு சுத்த செய்து கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும். உற்பத்தி செய்யும் அறையின் உள்ளே குறைந்தது 3 மிமீ தடிமன் கொண்ட ரப்பர் சீட் சரியான முறையில் விரிக்கபட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தி செய்யும் அறையில் அதிகபட்ச எடை அளவு 7.5 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உற்பத்தி செய்த பொருட்களை உற்பத்தி அறையின் வாசலிலோ அல்லது உற்பத்தி அறையை சுற்றியோ காய வைக்கக் கூடாது. உற்பத்தி செய்த பொருட்களை காய வைப்பதற்கு உலர் மேடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் சணல் கயிறை அறுப்பதற்கு பித்தளையினாலான அல்லது கன்மெட்டல் கத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் கயிறை உள் திணிப்பதற்கும், திரி வைப்பதற்கு துளையிடுவதற்கும் கண்டிப்பாக பித்தளையினாலான ஊசி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உற்பத்தி செய்த பட்டாசுகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பட்டாசுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளை தரையில் இழுக்கவோ தள்ளவோ கூடாது என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
உற்பத்திக்கு ஒரு நாள் தேவைக்கு மட்டுமே ரசாயன கலவையினை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துக் கலவையை தயாரிக்க அலுமினியம் 666 பவுடரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மருந்து வைக்கும் பணி மதியம் 2 மணியோடு முடிக்கப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கென உள்ள உலர் மேடையில் காய வைக்கப்பட வேண்டும். அட்டை குழாய்களின் அடிப்பகுதிகளில் தூர் மண் வைப்பதற்கு பதிலாக மரத்தூள் மற்றும் கம் பயன்படுத்தலாம். மருந்துக் கலவை அலசும், செலுத்தும் அறைகளில் இரண்டு தொழிலாளர்கள் தான் பணிபுரிய வேண்டும்.
உற்பத்தி அறைகளில் நான்கு தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.பருத்தியிலான ஆடைகளை மட்டும் அணிந்து பணிபுரிய வேண்டும். பட்டாசு உற்பத்தி பணியில் பயிற்சி பெற்ற வேலை தெரிந்த நபர்களை மட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
ஒருமுறை தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் சரியாக செயல்படவில்லை என்பதற்காக அப்பட்டாசை பிரித்துப் பார்த்து வேலை (சுநறழசம) செய்யக்கூடாது. பட்டாசு உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் ஸ்டார்ச் கலவைகளில் சிங்க் சல்பேட் அல்லது காப்பர் சல்பேட் (மயில் துத்தம்) பயன்படுத்தக் கூடாது. இவை வெடிமருந்தில் உள்ள ரசாயண பொருட்களை நீர்த்துப்போக செய்து தானாகவே வெடிக்க வைக்கும். கழிவு வெடிகளை உற்பத்தி அறைகளின் வெளியே இருப்பு வைக்கக்கூடாது. பட்டாசுகளை கையாளுவதற்கு இரும்பு ஆணிகள் அடிக்கப்பட்ட மரப்பெட்டிகளை பயன்படுத்தக்கூடாது.
மொபைல் போன்கள், ரேடியோ போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தொழிற்சாலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. சிகரெட், புகையிலை, தீப்பெட்டி போன்ற பொருட்களை தொழிற்சாலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இரசாயனப் பொருட்களை தலையில் சுமந்து கொண்டு செல்லக்கூடாது. இரும்பிலான கத்திகள், சாவிகள், குத்தூசிகள், இரும்பிலான காலணிகள் மற்றும் இதர இரும்புப்பொருட்களை தொழிற்சாலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. உற்பத்தி அறையினுள் தண்ணீர் பாட்டில்கள், சாப்பாடு கூடைகள் வைக்கக்கூடாது.
வேலை தெரியாத பணியாளர்களை அழைத்து வந்து வேலை பார்க்கக் கூடாது. வேலை முடிந்த பட்டாசுகளை இரு அறைகளுக்கு நடுவே அல்லது மரத்திற்கு கீழே உலர்த்தக்கூடாது. பட்டாசு ரகங்களை உலர்மேடை அல்லாத வேறு இடங்களில் காயவைக்கக் கூடாது. மரத்தடியில் அமர்ந்து வேலை பார்க்கக்கூடாது. அறைகளுக்கு இடைப்பட்ட நடைபாதைகளில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது. மது அருந்திய தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்க கூடாது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தவிர்த்து மற்ற வெளி நபர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது. பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பணியில் அமர்த்தக்கூடாது.
தொழிற்சாலையின் உட்புறமாக இரண்டுச் சக்கர நான்கு சக்கர வாகனங்கள் கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் புகைப்போக்கில் இருந்து வரும் தீப்பொறி பெரும் வெடிவிபத்து ஏற்பட காரணமாக அமையும். மருந்துக்கலவையை அட்டைக்குழாய்களில் அடைக்கும்போது அளவிற்கு அதிகமான அழுத்தத்துடனும் மற்றும் வேகத்துடனும் அடிக்கக்கூடாது. அடிப்பதற்கு மரக்கட்டை அல்லது பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்த வேண்டும். வெடி மருந்துக் கலவை அலசுபவர்கள் அல்லது செலுத்துபவர்கள் தவிர வேறு யாரும் அவ்வறைக்குள் செல்லக்கூடாது என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் குருசந்திரன் (திருச்செந்தூர்), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்செல்வன், துணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) சித்ரா, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் ஊரகம்) சுரேஷ், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.