2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி; கனிமொழி எம்.பி.பேச்சு
திருச்செந்தூரில் ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது. தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற யாராலும் இயலாது.
நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள், பிரச்சினைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனை புரிந்து கொண்டு தேர்தல் பணியில் நாம் செயல்பட வேண்டும். நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி.
தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தி.மு.க. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. திராவிட இயக்கமாக இல்லை. தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை தி.மு.க.வில் உள்ள அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டை காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், ”:தமிழகத்தில் இரண்டு, மூன்றாக பிரிந்து போனவர்கள் மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் எல்லோரும் தி.மு.க.வை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என நினைத்து வருகிறார்கள். அந்த கனவு பலிக்காது.வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்டுக்கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.