தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது; கோவில்பட்டி கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேச்சு
கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_
தி.மு.க. என்பது அரசியல் இயக்கம் இல்லை. அதை தாண்டி ஒரு சமூகத்துக்கான இயக்கமாக உள்ளது, நம்முடைய அடிப்படை தத்துவங்கள். அடிப்படை கருத்துகளை தாங்கி இருக்கக்கூடிய ஒரு இயக்கமாக அவற்றை நிறைவேற்றக்கூடிய அரசியல் இயக்கமாக இயங்கி கொண்டு இருக்கிறோம்.
நம்முடைய அடிப்படை கருத்து என்னவென்றால் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கவேண்டும். ஜாதி, மதம், ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கவேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சம வாய்ப்பு கொடுக்கபட்டு அனைவரும் சமமாக வாழ வேண்டும். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் சமமாக கிடைக்க வேண்டும். நியாயம், நீதி அனைவருக்கும் சமமான ஒன்றாக இருக்க வேண்டும்.இது தான் நமது அடிப்படை கொள்கை.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்ககூடிய ஒரு உலகத்தை, நாட்டை உருவாக்குவது தான். தி.மு.க.வின் கொள்கை. இதற்கு நேர் எதிரானது தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவின் கொள்கை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடாது, சில பேருக்கு எல்லாம் கிடைக்க வேண்டும். சில பேருக்கு எதுவும் கிடைக்க கூடாது. இதுதான் அவர்களின் அடிப்படை கொள்கை.
அதனால் தான் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அந்த தேர்வு எழுதவேண்டும் என்றால் பயிற்சி நிலையம் செல்ல வேண்டும், நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் அதற்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அதையும் தாண்டி மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க செய்து இருக்கிறோம், நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம், அந்த நிலையிலும் இந்த வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி எதிர் எதிர் கொள்கைகளை கொண்ட கட்சிதான் பா.ஜனதா. ஆனால் திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க., வினர், நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அப்படியே வைத்திருக்கும் கவர்னரை சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் கவர்னரை எதிர்க்க உங்களுக்கு சுய மரியாதை இல்லாமல் போய் விட்டதே என்று நாங்கள் வருத்தப்படுகிறோம் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் அ.தி.மு.க. இன்று செயல்பட்டு கொண்டு இருக்கிறது, அவர்கள் முன்கூட்டியை மத்திய அரசுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். அதில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை,
ஆகவே தமிழ்நாட்டில் நம்முடைய அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்கள் இரண்டு பேர். என்ன தலைகீழாக நின்றாலும் பா.ஜனதா தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது, மக்களிடம் போய் எஎந்த வகையில் பிரசாரம் செய்தாலும் மதம், ஜாதியை பயன்படுத்தினாலும் ஒரு பயனும் கிடைக்காது,
நமக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் 2 பேர் கூட்டணி சேர்ந்து கொண்டு அடுத்த தேர்தலில் நம்மை எதிர்க்க கூடியவர்களாக இருப்பார்கள்.
எனவே கடந்த தேர்தலில் எப்படி கண்ணும் கருத்துமாக செயல்பட்டோமோ, நமது கொள்கைகளுக்கு எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இவர்களுக்கு எதிராக இன்று நம்முடைய ஆட்சியை மக்கள் அமைத்து தந்து இருக்கிறார்கள்.
மத்திய அரசின் தவறான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மத்திய அரசுக்கு எதிராக முதலில் குரல் கொடுப்பவராக நமது முதல் அமைச்சர் இருக்கிறார்.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு மக்களின் பாராட்டுகளை அடுத்த தேர்தலில் வாக்குகளாக மாற்ற நாம் பாடுபடவேண்டும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றோம் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றியை இழந்தோம். இந்த முறை அது போல் இல்லாமல் முழுமையான வெற்றியை பெற வேண்டும், அப்போது தான் தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் உரக்க ஒலிக்கும். அதை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு வருங்கலத்தில் நமது பணிகள் இருக்க வேண்டும்,
மேற்கண்டவாறு கனிமொழி எம்.பி.பேசினார்.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன்,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
,.