• May 17, 2024

முன்னாள் மாணவரின் பஸ் பயணம் …(சிறுகதை)

 முன்னாள் மாணவரின் பஸ் பயணம்  …(சிறுகதை)

அந்த கிராமத்தில் அந்த ஒரு பள்ளிக்கூடம் தான் உண்டு. அது அரசு பள்ளிக்கூடம்….5 ம்வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிப்பார்கள். ஆறாம் வகுப்புக்கு மேல் நகர பகுதிக்கு சென்று படிக்க வேண்டும்.
அன்று விடுமுறை நாள். பள்ளி பூட்டிகிடந்தது. மாலை வேளை சோ என்று மழை கொட்டியது. பள்ளி அருகே ஒதுங்கினான் முனியன். காற்று பலமாக வீசியது. பள்ளிக்கு வெளியே ஒதுங்கியவன் மீது சாரல் அடித்தது. மழைவிடுவதாக தெரியவில்லை. பள்ளியின் உள்ளே போய்விடவேண்டியதுதான் என்று நினைத்தான். பூட்டை இழுத்து பார்த்தான் .திறக்கவில்லை.
தன்னிடம் உள்ள ஒரு சாவியை போட்டு திருக்கினான்.பூட்டு வாயை பிளந்து வழிவிட்டது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் பள்ளிக்கூடம் இருந்ததால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை.
பள்ளிக்குள் சென்ற முனியன் சுற்றிப்பார்த்தான். பிளாக் போர்டில் அறம் செய்ய விரும்பு என்று எழுதி போடப்பட்டிருந்தது. நான் படிக்கிற காலத்தில் இருந்தே இப்படித்தான் எழுதிபோடுறாங்க. அது என்ன பொருளுன்னு தெரியாம படிச்சோம்…
அப்பல்லாம் வாத்தியாரு மேசையிலே ஒருகம்பு இருக்கும். சரியா படிக்காட்டி வாத்தியாரு விளாசிருவாரு. இப்பம் மேசையிலே அந்த கம்பெல்லாம் காணம்..எங்க போச்சோ தெரியல..என்று முனியன் தனக்குள் பேசிகொண்டான்.
இரண்டாம் வகுப்பில் தான் அமர்ந்த பெஞ்சை தேடினான். உடைந்திருந்தது. இன்னும் அப்படியே வைச்சிருக்காங்க…. மாத்தமாட்டாங்க போல என்று முணுமுணுத்தான்.
மழை அதிகம் பெய்ததால் பள்ளியின் உடைந்த ஓடுவழியாக தண்ணீர் உள்ளே வழிந்தது. ச்சே…அந்த ஓட்டையும் இன்னும் மாத்தலையா…அப்போ…சாப்பாடு தட்டை எடுத்து மழை தண்ணீர் விழுகிற இடத்தில் வைப்போம்…இப்போ தட்டு எங்கே இருக்கோ…தேடிப்பாப்போம்..உள்ளறையில் தட்டுகள் இருக்கும் இடத்தில் ஒரு தட்டு கிடந்தது. தூசியை துடைத்துவிட்டுபார்த்தான்.
அதில் முனியன் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆ…இது என் தட்டு..அப்படியே கிடக்கு என்று சொல்லியவன் அந்த தட்டை எடுத்து மழை தண்ணீர் விழுந்த பகுதியில் வைத்தான்.
தலைமை ஆசிரியர் அறைக்கு மெல்ல சென்றான். உள்ளே அறையில் விழிப்புணர்வு ஊட்டும் வாசகங்கள் அடங்கிய படங்கள் தொங்கவிடப்பட்டிருந்நன.அதை பார்த்து கொண்டே வந்த முனியன் அந்த பள்ளியில் படித்து சாதனைபடைத்தவர்களின் புகைப்படத்துடன் அவர்கள் வகிக்கும் பதவியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
ஆ..முருகன்..இப்போ போலீஸ் இன்ஸ்பெக்டரா…பரவாயில்லையே…அடா…இது நம்ம சுரேசு…பேங்க் மேனேஜரா… இது அடையாளம் சரியா தெரியலையே…ஆ வெங்கடேசன்….வக்கீலா..பரவாயில்லையே….
நூறு பேரு படிச்சதிலே ஒரு பத்து பேராவது சொல்லும்படியாக வளர்ந்திருக்காங்க…..அன்னைக்கு மட்டும்….அந்த வாத்தியார் அடிக்காம இருந்திருந்தா….நானும் நல்லாபடிச்சி பெரிய ஆளாகி இருப்பேன்.
புத்தகம் கொண்டுவராததுக்கு அப்படி அடிச்சாரு.போய்யா நீயும் உன் பள்ளிக்கூடமும் அப்படின்னு ஓடிட்டேன்.அம்மா,அப்பா இல்லே.பாட்டியிடம் இருந்தேன்.பாட்டியும் பள்ளிக்கு போகச்சொன்னா.வீட்டைவிட்டே ஓடி போயிட்டேன். பாட்டியும் போய்சேர்ந்திட்டா.ஊரைவிட்டு போயி இருபது வருஷம் இருக்கும்.யாரையும் நம்மளை அடையாளம் தெரியாது .காலம் எப்படி ஓடிப்போச்சு என்று முனியன் பெரு மூச்சுவிட்டான்.மழை கொஞ்சம் நின்றது. முனியன் பெயரிட்ட தட்டில்மழை தண்ணீர் நிரம்பி இருந்தது.அதை பார்த்த முனியனின் கண்களிலிருந்து கண்ணீர் துளிசிதறியது.அப்படியே வெளியே வந்தவன் பள்ளி பூட்டை பூட்டிவிட்டு நடந்தான்.
மழை நின்றது.எதிரே வந்தவர்களுக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. பஸ் நிலையங்களிலும் ரெயில் நிலையங்களிலும் உள்ள அவனது போட்டோ அவனுக்கு மட்டும் அடையாளம் தெரிந்தது. அவன் அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறினான். அவன்படித்த பள்ளியை கடந்து சென்றது அந்த பஸ்.
வே.தபசுக்குமார்-தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *