• May 17, 2024

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

 மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, அ.தி.மு.க.வினர் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நாளை (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நாளை காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். எனவே நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த 9 மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
9 மாவட்ட அ.தி.மு.க.வினர் ஒரே இடத்துக்கு வருவதால் நாளை காலை கலெக்டர் அலுவலக பகுதியில் மிகப்பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார், வடசென்னை (தெ) (மே) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, தென் சென்னை (வட)(கி) மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், தென்சென்னை (தெ) (மே) மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, வட சென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தென்சென்னை (வ) (வ) மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்யா, வடசென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தென்சென்னை (தெ) (கி) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *