தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
![தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/dinamani_import_2018_10_4_original_ship1-850x500.jpg)
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தினமும் காலை 5 மணிக்கு கடலுக்கு செல்லும் இந்த மீனவர்கள் இரவு 9 மணிக்கு கரை திரும்பி விடுவர்.
இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்யும் கேரள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்க தமிழக அரசு மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கடலுக்கு போகாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 5000 மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)