• May 20, 2024

`தமிழக மக்களை 13 வருடமாக ஒருதலையாக காதலிக்கிறேன்-ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்’; கோவில்பட்டி கூட்டத்தில் சீமான் பேச்சு

 `தமிழக மக்களை 13 வருடமாக ஒருதலையாக காதலிக்கிறேன்-ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்’; கோவில்பட்டி கூட்டத்தில் சீமான் பேச்சு

கோவில்பட்டியில் புரட்சி தீ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி முத்துகுமார், பழனிபாபா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. மெயின்ரோட்டில் உள்ள காமராஜர் சிலை அருகே மேடை அமைக்கபட்டு இருந்தது.

இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை கேட்க கூட்டம் திரண்டு வந்தது. காமராஜர் சிலை அருகே இருந்து கருவாட்டு பேட்டை வரை சாலையில் மக்கள் கூடி இருந்தனர்.

பொதுக்கூட்ட மேடைக்கு சீமான்  வந்ததும் அங்கு வைக்கப்பட்டு இருந்த முத்துகுமார், பழனிபாபா ஆகியோர் உருவபடங்களுக்கு முன்பு ஜோதியை ஏற்றி வைத்து சீமான் வணங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

தேர்தல் வந்து விட்டால் தனித்துதான் போட்டி. வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி தனித்து தான் போட்டியிடுவோம். ஏனென்றால் இந்த் மண்ணின் பிள்ளைகள். மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நோக்கிதான் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.

புலியைபோல் தனித்து வேட்டையாடினால் தான் நன்றாக இருக்கும். தனித்தே போட்டியிடுவோம். ஜெயித்தாலும் , தோற்றாலும் வீர மறவனாக விழுவோம்.  அநீதிக்கு எதிராக உண்மையான போராளியாக இருக்க இருப்போம்.

தமிழக மக்கள் மத்தியில் இனப்பற்று இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன். இன வெறி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆளப்படுவீர்கள். இல்லாவிட்டால் ஆளவிடமாட்டார்கள். ஜாதி, மதம் என்று இருந்தால் தனிமைப்படுத்தப்படுவீர்க்ள. தூக்கி எறியப்படுவீர்கள்.

நாம் தமிழர் கட்சி அரசியலில் என்றும் புரட்சியை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். தோற்போம் என்று தெரிந்தும் தனித்தே களம் காண்போம். இங்கே திரண்டு இருப்பது உண்மையான எழுச்சி கூட்டம். பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கும் புரட்சிப்படை.

நாம் செய்து கொண்டு இருப்பது தான் புரட்சி. திமுக வளர்ச்சிக்கு எத்தனை அறிஞர்கள் உழைத்தார்கள். ஆனால் கருணாநிதி கைக்கு வந்தவுடன்  திமுக தற்போது குடும்ப கட்சியாகிவிட்டது. தனிப்பட்டவர்களின்  சொத்தாகி விட்டது. ஸ்டாலின் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டமுடியுமா?  தனியாக கட்சி தொடங்கினால் அவரது குடும்பத்தில் எத்தனை பேர் வருவார்கள்.

கோவில்பட்டியில் இன்று சீமான் பேசுகிறார் என்று முழுப்பக்க விளம்பரம் வந்ததா? இல்லை வெறும் சுவரொட்டி தான். இங்கு திரண்டு வந்த கூட்டம் அவர்களாக வந்தவர்கள். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி. எம்.ஜிஆருக்கு பிறகு ஜெயலலலிதா, பின் சசிகலா வாங்கி எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார். அவர் தற்போது அதிமுகவை வைத்து இருக்கிறார். நாங்கள் அப்படி அல்ல. சாதி, ,மத உணர்வு. பற்று உள்ளவர்களால் முன் எடுக்கப்பட்டது.

இளைஞர்கள் என்றைக்கும் சாதி மத போதைக்கு, நடிகை காட்சிக்கு அடிமையாகி விடாமல் எழுச்சியுடன் கிளர்ந்து வரவேண்டும். புரட்சி என்றால் ரத்தம் சிந்த வேண்டும் என்பது  அல்ல, வெளிப்படையான சமுதாயம் படைப்பது தான் புரட்சி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்க கூடாது.

மதுவை எப்படி ஒழிப்பது? என்னிடம் 5 வருடம் கொடுத்து பாருங்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய பானம் என்று ஒன்று வைத்து இருக்கிறார்கள். நமது நாட்டுக்கும் கள் இருக்கிறது. அதை கள் என்று சொல்லாமல் பனம்பால், தென்னம்பால், மூலிகை சாறு என்று கூட அழைக்கலாம். மது குடித்தால் மட்டை ஆகும் வரை குடித்து கொண்டே இருப்பாய்.பனம்பால் குடித்தால் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சொல்லிவிடுவாய். போதும் என்று சொல்வது உணவுக்கு அடுத்தபடியாக கள்ளைத்தான்.

எனவே நாம் ஆட்சிக்கு வருகிறோம். கள்ளுக்கடையை  திறக்கிறோம். 1-ம வகுப்பு முதல் உயர் கல்வி வரை இலவச கல்வி தருகிறோம். இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களே இலையே? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் அணியில் 11 பெரும் தமிழர்கள் என்ற நிலையை உருவாக்கி காட்டுகிறோம்.

சட்டைப்பையில் ஸ்டாலின், உதயநிதி படம் வைத்து இருக்கிறார்கள். எனது பிள்ளைகள் நமது தலைவர்  (பிரபாகரன்) படத்தை வைத்து இருக்கிறார்கள். நெஞ்சிலே வீரனை சுமக்க வேண்டும். வெட்டி சவடால் பெசுவபவர்களை சுமக்ககூடாது. மோடி யையும், இ.டி.யையும் அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். ஆனால் தந்தையும் மகனும் தனித்தனியாக போய் மோடியை சந்தித்து வருகிறார்கள்.

எந்த மாநிலத்திலும் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமரை அழைக்கவில்லை. இங்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு மோடி வந்து இருக்கிறார். கேலோ என்றால் இந்தி வார்த்தை. ஆட்சியில் இல்லாவிட்டால் இந்தி த தெரியாது போடா…  ஆட்சியில் இருந்தால் இந்தி தெரியும் வாடா.. வா?

நான் தமிழக மக்களை 13 வருடமாக ஒருதலையாக காதலிக்கிறேன்.,மனம் உருகி உருகி காதலிக்கிறேன். நீங்கள் யாரையோ கல்யாணம் செய்து வந்து விடுகிறீர்கள். ஒரு தடவையாவது கடைக்கண் காட்டினால் இன்னும் 10 ஆண்டை ஓட்டிவிடுவேன். நான் என்ன கேட்கிறேன் உங்கள் சொத்தையா கேட்கிறேன்… ஒரே ஒரு ஓட்டு!

விவசாயிக்கு ஒரு ஓட்டு போடுங்கள் . நீங்கள் 3 வேளையும் சாப்பிட துணை இருக்கும் விவசாயி (நாம் தமிழர் கட்சி சின்னம்) க்கு ஒரு தடவை ஓட்டு போடுங்கள். உயர்ந்த நாடாக ஆக்கி காட்டுகிறேன்,

இங்கு கூடி இருப்பது காசுக்காக வந்த கூட்டம் அல்ல.கடமைக்காக வந்த கூட்டம், நமக்கு ஒரு வாய்ப்பை வரலாறு தந்து இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தல்,  2026 சட்டமன்ற தேர்தல். நாம் விழிப்புடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும். நம்பி வாருங்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

சீமான் பேசிய போது கூட்டத்தினர் அவ்வப்போது கைதட்டியும், விசில் அடித்தும், குரல் கொடுத்தும். ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *