• May 2, 2024

38 மாவட்டங்களில்நடை பயிற்சிக்கான நடைபாதை திட்டம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 38 மாவட்டங்களில்நடை பயிற்சிக்கான நடைபாதை திட்டம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


நாகர்கோவிலில்  ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ள Health Walk திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சூரிய அஸ்தமன) பகுதியில் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு நடந்தது முடிவில் , செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற தலைப்பில் ஹெல்த் வாக் திட்டமானது வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஹெல்த் வாக் சாலை ஒன்று உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 38 வருவாய் மாவட்டங்களில் ஹெல்த் வாக் சாலைக்கான இடம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறையின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றையதினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு இடம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் நடுவது, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் இருக்கைகள் அமைப்பது, அதோடுமட்டுமல்லாமல், நடப்பதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே நிறுவுவது, ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், தூர பலகைகளும் நிறுவப்பட உள்ளது.

ஒரு மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்படும் இடத்தினை கடந்து செல்பவர்கள் நாமும் நடக்க வேண்டும் என்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சாலையினை பொருத்தவரை ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் ஹெல்த் கேம்ப் ஒன்றை நடத்துவார்கள். இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் கண்டறியப்படும். மேலும் இம்முகாமில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குடிநீர், வாழைப்பழம் போன்றவைகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான திட்டமிடலை மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து மேற்கொள்ள உள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விரைவில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 38 மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *