காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
![காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/07/cca659df-6cd9-4aba-934d-a5c978af4dfa-850x560.jpeg)
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், தி.நகர் சத்யா,விருகை வி.என்.ரவி,அசோக் மற்றும் நிர்வாகிகள்.தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர்..கத்திரிக்காய் மாலை, தக்காளி மாலை மற்றும் காய்கறிகள் மாலையாக அணிந்து, நூதன முறையில் காய்கறிகளை பாடையில் ஏற்றி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
விலைவாசி விண்ணை தொடுகின்றது, சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது எனவே தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியான முறையில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை, சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை கொலை நகரத்தின் தலைநகரமாக மாறிவிட்டது.
சட்டம்- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழ்நாடு ஒரு அமளி பூங்காவாக மாறிவிட்டது தி.மு.க அரசு தமிழக மக்கள் மீது கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது என ஜனநாயகத்திற்கு விரோதமான செயலை தான் செய்து கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை வளர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள் என அத்தனை பேரும் வீதியில் நின்று போராடுகின்றனர். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக இருந்து கொண்டு அவருக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை. தனது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் கோடி கோடியாக கொள்ளையடித்து ஆசியாவிலேயே தனது குடும்பம் தான் பணக்கார குடும்பமாக திகழ வேண்டும் என்றும் இவர் செய்யும் ஊழலினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர்.
வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்சார வரி ஆகியவற்றை அதிகரித்து மக்களின் நலன் பற்றி கவலை இல்லாமல் எங்களுக்கு ஊழல் தான் முக்கியம் என்று போலி ஆட்சி நடத்தி இன்னும் சிறிது காலத்தில் வீட்டுக்கு திரும்ப உள்ளது தி.மு.க. அரசு.
தி.மு.க. அரசின் அமைச்சர்கள் மருத்துவத்துறை என்றால் கூட மருத்துவமனையை எட்டிப் பார்க்காதவர்கள், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும்போது அனைத்து அமைச்சர்களும் சென்று கவனிப்பது ஏன்.
இப்போது தான் செந்தில் பாலாஜி சென்றிருக்கிறார், அடுத்து பொன்முடி போவார் அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்..
ஏதோ தேசத்துக்காக போராடியவர் போல தியாகம் செய்தவர் போல செந்தில் பாலாஜிக்கு சிறைச்சாலையில் ஏர் கண்டிஷனர், வீட்டில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. இது எல்லாம் சரியா.? .ஊழல் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது விந்தையாக உள்ளது.
2018ல் மக்களவையில் கழக மக்களவை உறுப்பினர்கள் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கையான காவிரி நதிநீர் பிரச்சனையை வலியுறுத்தி தொடர்ந்து 22 நாட்கள் மக்களவையை ஒத்திவைக்க செய்தனர்.அதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும்
காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய இரண்டு குழுக்களை அமைத்து தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
ஆனால் உங்கள் கூட்டணி கட்சிகளுடன் உள்ள 38 எம்.பி-க்களை வைத்துள்ள நீங்கள் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்து கிழித்தீர்கள்?.வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றீர்கள். 25 மாதங்கள் கடந்துவிட்டது. மற்றவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட புகார்களை கூறும் போது, உங்கள் முதுகில் உள்ள அழுக்கை மறந்துவிட்டு பேசலாமா?
அமைச்சர் சுப்பிரமணியன் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுமனையை அபகரிக்க தன் மனைவியின் தகப்பன் பெயரையே மாற்றியவர்தான் . அவர் மீது இது சம்பந்தமாக இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. காலம் பதில் சொல்லும். உப்பை தின்றவன் தண்ணீர்
குடித்தே தீர வேண்டும். நீங்கள் யோக்கியமானவர்களாக இருந்தால் எதற்கு இந்த கபட நாடகம்?.சட்டத்தின் முன் நிரபராதி என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.
தமிழக வரலாற்றிலேயே, சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மாபெரும்
தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
ரிமாண்டில் சிறைவைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)