• May 19, 2024

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காதது ஏன்? பிரதமர் கேள்வி

 பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காதது ஏன்? பிரதமர் கேள்வி

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். காணொளி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் – டீசல் விலை உயர்வையடுத்து வாட் வரியை குறைக்க வேண்டும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்று மாநிலங்களை கேட்டுக்கொள்கிறேன்.

பல மாநிலங்களில் பெட்ரோல் – டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் பல குடும்பங்களை பாதிப்படைய செய்கிறது.

குடிமக்களின் சுமையை குறைக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

குஜராத், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும் சில மாநிலங்கள் இதனை செய்யவில்லை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

வரியைக் குறைக்கும் மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது. ஆனால் பல மாநிலங்கள் இதனை ஏற்றுக் கொண்டு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. கர்நாடகா வரிகளைக் குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.4000 முதல் ரூ.5,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கும்.

குஜராத் மாநிலம் மேலும் ரூ.3,500-4,000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும். ஆனால், இதே சமயத்தில் வாட் வரியை குறைக்காத மகாராஷ்டிரா மாநிலம் ரூ.3,500 முதல் 5,500 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

மாநில அரசு எரிபொருள் வரியை குறைத்து அதன் பயனை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகளாவிய நெருக்கடிகளின் போது, கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வைப் பின்பற்றி, ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *