சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு: முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில் அங்கு பணம் செலவு செய்ய முடியாமல் விக்னேஷை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவரை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். எமர்ஜென்சியில் சேர்க்கப்பட்டும் விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் எமர்ஜென்சியில் டாக்டர்களே இல்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷின் உறவினர்களுடன் கிண்டி காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் அமைதியாகினர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “இளைஞர் விக்னேஷ் கடைசி நேரத்தில் கிண்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. எமர்ஜென்சியில் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளது.