கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணி: 17-ம் தேதி முதல் பேருந்துகள் நிறுத்தும் இடம் மாற்றம்
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பனி நடைபெற இருப்பதால் 4 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதற்கு பதிலாக பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது.
கூடுதல் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிபப்டை வசதியும் கிடையாது. எனவே அங்கிருந்து பேருந்துகள் கிளம்பினால் சரியாக இருக்காது என்று எதிர்ப்புகள் வந்தன. இதனால் குறிப்பிட்ட நாளில் அண்ணா பேருந்து நிலையத்தில் பணிகள் நடக்கவில்லை வழக்கம் போல் பேருந்துகள் அங்கிருந்து இயங்கின.
இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தொடர்பாக 17-ந்தேதி முதல் பேருந்துகள் நிறுத்தும் இடம் மாற்றப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் தமிழ்நாடு அரசு மூலதன நிதி மற்றும் இயங்குதல் மற்றும் பராமரிப்பு 2024-25-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் பணிகள் நவம்பர் .17-ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் மேற்கொள்ள வசதியாக அனைத்து பேருந்துகளும் மாற்று இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
* அண்ணா பேருந்து நிலையம் முனியசாமி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி பேருந்துகள் வந்து நிறுத்தி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
*மினி பேருந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆர்த்தி மருத்துவமனை நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.
*தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
*குருவிகுளம், கயத்தாறிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளை நகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.