• May 3, 2024

முண்டு வத்தல் தரம் பிரிக்கும் விவசாயிகள்; போதிய விளைச்சல் இல்லாததால் கவலை 

 முண்டு வத்தல் தரம் பிரிக்கும் விவசாயிகள்; போதிய விளைச்சல் இல்லாததால் கவலை 

 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்கா, கம்பு, வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்த மல்லி போன்றவைகள் விதைப்பு செய்தனர்.

இங்கு பெரும்பாலும், மானாவாரி விவசாய நிலங்களாகும், கடந்த டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை பெய்துபயிர்கள் கடும் சேதம் ஏற்பட்டது.இதனால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இயற்கை இடர்பாடால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர். பருத்தி மற்றும் மிளகாய் பழம் மகசூல் காலம் ஆறு மாதமாகும். மேட்டு பகுதி நிலங்களில் முளைத்த பயிர்கள் தற்போது பருத்தி மற்றும் மிளகாய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் எட்டையபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம்,புதூர் பகுதி கரிசல் நிலங்களில் விளையக்கூடிய முண்டு வத்தலுக்கு சந்தையில் அதிக மவுசு காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முண்டு வத்தல் குவிண்டாலுக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. 

தற்போது முண்டு மிளகாய் பழம் அறுவடை செய்யப்பட்டு களத்து மேட்டில் விவசாயிகள் காய வைத்துள்ளனர். பத்து நாட்களுக்கு ஒரு முறை பழம் பறிக்கப்படுகிறது. சராசரியாக நான்கு முறை பறிப்பு செய்யப் படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு முதல் பறிப்பில் மட்டுமே மிளகாய் பழம் திரட்சியாக காணப்பட்டது. அடுத்தடுத்த பறிப்பு நடுத்தரமாகவும், சுமாராகவும் உள்ளது. இந்நிலையில் காய வைக்கப்பட்டுள்ள மிளகாய் பழம் தரம் பிரிக்கப்படுகிறது.

ஆற்று மணலில் காய வைக்கப்படும் பழம் காய்ச்சலாகவும், நிறமாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தூறல் மழைக்கு மிளகாய் பழம் காம்பு பகுதியில் வண்டு துளைத்து குவிண்டாலுக்கு 20 கிலோ வரை வத்தல் சோடை ஏற்படுகிறது. ஏற்கனவே ஏக்கருக்கு 4 குவிண்டால் வரை கிடைத்த வத்தல் இந்தாண்டு ஏக்கருக்கு அதிக பட்சமாக ஒன்னரை குவிண்டால் மட்டுமே கிடைத்துள்ளது.

வத்தல் பருவட்டு குவிண்டால் ரூபாய் 17 ஆயிரம் வரையிலும் நடுத்தரம் 15 ஆயிரம் வரை விலை போகிறது. ஏக்கருக்கு உழவு, களை, மருந்து, பறிப்பு கூலி என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து , அதன் மகசூல் வருவாய் அதை விட மிகவும் குறைவாக கிடைத்துள்ளது. 

தவிர டிசம்பர் 14ந்தேதி க்கு முன்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகசூல் நஷ்டத்தை ஈடுகட்ட டிசம்பர் 17 க்கு பின்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்  என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் உட்பட பல்வேறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *