கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது.
பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. இரவு 7மணிக்கு மேல் 7.50 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றிற்கு 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
2ஆம் திருநாளான இன்று புதன்கிழமை (மார்ச். 6) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறும். 3ஆம் திருநாளான வியாழக்கிழமை (மார்ச் 7) இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பரை திருவீதி உலாவும், 4ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 8) காலை 8 மணிக்கு மஞ்சள் பால்குடம் ஊர்வலமும், அதைத் தொடர்ந்து 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.