• May 20, 2024

விஜயகாந்தின் நீடிக்காத அரசியல் வெற்றி

 விஜயகாந்தின் நீடிக்காத அரசியல் வெற்றி

விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக சரியாக பயன்படுத்தி கொண்டவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்குவது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், பா.ம.க. உறுப்பினர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையிலான மோதல் என்று பல்வேறு காரணங்கள் கூறலாம்,

ஆரம்பத்தில் ஒவ்வொரு ஊராக சென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க தொடங்கினார். பிறகு, 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜயகாந்த்.

அவருடைய கட்சி அறிவிப்பு  மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகளை அறிவித்தார். ஊழல் ஒழிப்பு, திராவிட கட்சிகளுக்கு மாற்று ஆகியவை அந்த கொள்கை அறிவிப்பில் முக்கியமாக இடம் பெற்றன.

2006 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எதுவும் ஏற்படுத்தி கொள்ளாமல், 232 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து போட்டியிட்டவர்களில் யாரும் மக்களிடையே பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்கள்.

இருந்தும், அதில் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்று, இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் மட்டுமின்றி  பா.ம.க.வுக்கும் விஜயகாந்த் அதிர்ச்சியளித்தார்.

கருணாநிதியுடன் விஜயகாந்த்
மு.க.ஸ்டாலினுடன் விஜயகாந்த்.

சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தே.மு.தி.க.வின் வாக்குகள் இருந்தன.விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க.வை சேர்ந்த கோவிந்தசாமியை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்..அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க கணிசமான வாக்குகளைப் பெற்றது.

இந்த நேரத்தில் பாலம் அமைப்பதற்காக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தி இடிக்கப்பட்டது. தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தி.மு.க. இப்படி செய்வதாகக் குற்றம் சாட்டினார் விஜயகாந்த்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே தே.மு.தி.க போட்டியிட்டது. அதில் 10.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

2011 தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மீது எதிர்ப்பலை பெரிதாக இருந்தது. அதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், தி.மு.க.வின் ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக  இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.

அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

தேர்தல் முடிந்த சில மாதங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே  மோதல் உண்டானது. ஒரு கூட்டணி கட்சியாக இருந்து, அந்த கூட்டணியில் ஆளும் கட்சி கூட்டணியாகி பின்னர் எதிர்க்கட்சியாக வந்துவிட்டார்.

விஜயகாந்த்-ஜெயலலிதா இருவருக்கும் ஒத்துப்போகாத நிலை ஏற்பட்டதற்கு, தன்னால்தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று விஜயகாந்த் நினைத்ததும் இவர் இல்லாமலேயே நாம் ஜெயித்திருக்க முடியும் என்று ஜெயலலிதா நினைத்ததும்தான் காரணம்.

சட்டமன்றத்தில் இருகட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜெயலலிதா முன்னிலையிலேயே ‘ஏய்…’ என்று அ.தி.மு.க. உறுப்பினர்களை விஜயகாந்த்  எச்சரித்தார். அவருடைய இந்தச் செயலுக்கு வெளியிலிருந்து மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பின.

தே.மு.தி.க. வில் இருந்து  8 சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுக்கு சென்றனர். அதற்கு பிறகு, ஆளும் கட்சிக்கு எதிராக பெரிய நடவடிக்கைகளை தே.மு.தி.க. மேற்கொள்ளவில்லை.

மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன் விஜயகாந்த்

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று 4 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தின் பொது விஜயகாந்த் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை வெகுவாக சரித்தன. பல்லைக் கடிப்பது, தொண்டரை அடித்தது போன்ற விஜயகாந்த்தின் செயல்பாடுகள், இவரைக் கேலிக்குரியவராக மாற்றியதுடன்  பெரிய அளவில் பாதித்தது

தனித்துப் போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, கூட்டணிக்கு சென்ற பின்னர் 7.9%, 6.1% என குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆக சரிந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர்.

போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவரின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து தே.மு.தி.க. செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் வருகை தருவது வழக்கம். எதுவும் பேசாமல் தொண்டர்களின் உற்சாக வரவேற்பை கண்டு மகிழ்ந்தபடி சென்றுவிடுவார்.

விரைவில் பூரண நலம் பெற்று பொது மேடையில் விஜயகாந்த் பேசுவார் என்று தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் மரணம் பிரித்து விட்டது.

விஜயகாந்த், அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்று உதவிகள் செய்து வந்தார்.

குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து எனப் பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவிவந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் எனப் பாரபட்சமின்றி முதல் ஆளாக முன்வந்து நிவாரணங்கள் வழங்கினார். மேலும், பல்வேறு தமிழர் சார்ந்த உரிமைப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினார். இது போன்று எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்.

இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே ஒவ்வொருவர் மனதிலும் என்றைக்கும் வலம்வருவார்  விஜயகாந்த்….!

-SKTS திருப்பதி ராஜன்-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *