• May 9, 2024

ரூ.1 1/2கோடி வரை கடன் வழங்கும் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்’; தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கம்

 ரூ.1 1/2கோடி வரை கடன் வழங்கும் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்’; தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் மாவட்ட தொழில் மையம் சார்பில் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்’ அறிமுக நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, திட்டத்தை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட தொழில் மையம் மேலாளர் அ.சுவர்ணலதா முன்னிலை வகித்தார். மேலும் திட்ட விளக்க உரையாற்றினார்
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ், தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா மலர் தூவி மரியாதை

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில் மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
தாட்கோவில் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரை மானியம் கொடுக்கப்பட்டது. தற்போது, அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தின் மூலம் ரூ.1.50 கோடி வரை மானியம் பெறலாம். அதுமட்டுமல்லாமல், வட்டிமானியம் 6 சதவீதம் முன்முனை மானியமாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுயமாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெற வேண்டும்.

புதிய திட்ட அறிமுக விழா வில் பங்கேற்றோர்.

நமது மாவட்டத்தில் புதியம்புத்தூர் போன்ற இடங்களில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் குறு நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று புதுமையான தொழில்களை தொடங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் தொழிலும் வளர்ச்சி அடைகிறது. வேலைவாய்ப்புகளும் உருவாகிறது. இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லவேண்டுமென்ற எண்ணங்கள் உண்டு. ஆனால், நீங்கள் சுயமாக ஒரு தொழில் தொடங்கும் போது நீங்கள் தொழிலதிபராக மாறி நீங்களும் பயன்பெற்று, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கா.நாணயம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ம.பேச்சியம்மாள், நெல்லை மண்டல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குனர் ஞா.ஜெரினாபபி, தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் இசக்கிமுத்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் கி.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *