கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நவீன வசதிகள்; அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
மத்திய அரசின் சார்பில் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரெயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5 ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல், நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ள ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் தெற்கு ரெயில்வே தலைமை என்ஜினீயர் மஸ்தான் ராவ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ரதிப்பிரியா, மதுரை கதிசக்தி துணை தலைமை என்ஜினீயர் சூரியமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் அந்த ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கீழுர் ரெயில் நிலையம் வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பகுதிக்கு தேவையான ரெயில் தண்டவாளங்கள் நேற்று சிறப்பு ரெயில் மூலம் கொண்டு இறக்கி வைக்கப்பட்டன.
இதனால் விரைவில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் புதிய தண்டவாளத்தில் ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.